இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்துப் பேசுகையில் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ பிரிவினையை தூண்டியதாகக் கூறி அவரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். இதேபோல ம.தி.மு.க. அவைத் தலைவர் கண்ணப்பனும் கைது செய்யப்பட்டார்.
webdunia photo
FILE
அண்மையில் ம.தி.மு.க சார்பில் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் வைகோவும், அக்கட்சியின் அவைத் தலைவர் கண்ணப்பனும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினர்.
அவர்களது கருத்துக்கள் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்று பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புக் கிளம்பியது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.
இந்தநிலையில் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோவை சென்னையில் இன்று காவல்துறையினர் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து அவரை சென்னை ஜார்ஜ் டவுன் பெருநகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், அவரை நவம்பர் 6ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதேபோல் தனித் தமிழ்நாடு விரைவில் மலரும் என்று பேசிய கண்ணப்பனை, பொள்ளாச்சியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழகத்தில் தமது தலைமையிலான ஆட்சி இப்போது இருந்திருந்தால், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகப் பேசியிருப்பவர்களை நிச்சயமாகக் கைது செய்திருப்பேன் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா நேற்று கூறியிருந்த நிலையில், வைகோ கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.