கடந்த 3 நாட்களாக சென்னையில் பெய்த தொடர் மழையால் தாழ்வான பகுதிகளிலும், குடிசை பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து வெள்ள நிவாரண பணிகளை சென்னை மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது. நிவாரண பணிகளை துரிதப்படுத்துவதற்காக ஒவ்வொரு மண்டலங்களிலும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி வீதம் 11 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நிவாரண பணிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரடியாக சென்று பார்வையிட்டார். புளியந்தோப்பில் நிவாரணப் பணிகள் முறையாக நடக்கிறதா என்பதை பெண்களிடம் கேட்டு அறிந்தார்.
சென்னை கணேசபுரம் ரயில்வே பாலம் அடியில் தேங்கிக் கிடந்த நீர் அகற்றப்படுவதை பார்வையிட்ட அமைச்சர் ஸ்டாலின், மருத்துவ முகாம்களில் தேவையான மருந்துகள் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார்.