சென்னை தூத்துக்குடி துறைமுகம்- பாளைங்கோட்டை நெடுஞ்சாலைப்பணிகள் நடைபெறாததை கண்டித்து அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி துறைமுகம் முதல் பாளையங்கோட்டை வரை 47 கிலோ மீட்டர் தூர நான்குவழி தேசிய நெடுஞ்சாலை அமைக்க 231 கோடி ரூபாய் நிதி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது.
இந்தப் பணி 12.8.2006-க்குள் முடிக்கப்பட வேண்டும். ஆனால், வெறும் 25 விழுக்காடு பணிகளே இதுவரை நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள 75 விழுக்காடு பணிகளை முடிக்க மேலும் சுமார் 280 கோடி ரூபாய் தேவைப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டி.ஆர். பாலுவின் கவனக்குறைவினால் மக்களின் வரிப் பணம் 280 கோடி ரூபாய் அளவுக்கு விரயம் செய்யப்பட்டிருக்கிறது.
தூத்துக்குடி துறைமுகம் -பாளையங்கோட்டை நெடுஞ்சாலைப்பணிகள் நடைபெறாததன் காரணமாக, அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர்ச்சேதங்கள் ஏற்படுகின்றன. வாகனங்கள் அடிக்கடி பழுதடைகின்றன. பயணிகள் உரிய நேரத்தில் தங்களது பணிகளை கவனிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். அரசுப் பணம் வீணடிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், மக்களின் பணமும் விரயமாகின்றது. இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும், மக்களின் குரலுக்கு, மத்திய, மாநில அரசுகள் செவிசாய்ப்பதாகத் தெரியவில்லை.
இதற்கு காரணமான, மத்திய அரசைக் கண்டித்தும், தி.மு.க. அரசைக் கண்டித்தும், தூத்துக்குடி மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் நாளை (23ஆம் தேதி) காலை 10 மணி அளவில், இருசக்கர வாகனங்களில் பேரணியாக, நான்குவழி தேசிய நெடுஞ்சாலையின் வழியோரத்தில் அமைந்துள்ள கிராமமான வசவப்புரத்தில் தொடங்கி, வல்லநாடு, தெய்வசெயல்புரம், வாகைக்குளம், புதுக்கோட்டை, கோரம்பள்ளம் ஆகிய கிராமங்களின் வழியாக பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளப்பட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.