புதிய கூடுதல் மின்கட்டணம் ரத்து : தமிழக அரசு அறிவிப்பு!
புதன், 22 அக்டோபர் 2008 (12:38 IST)
"எதிர்க்கட்சிகளின் குரலுக்கு மதிப்பளித்து வீடுகளுக்கு 600 யூனிட் என்பதை மாற்றி, யூனிட் கணக்கு இல்லாமல் எல்லா வீடுகளுக்குமே கூடுதல் தொகை வசூலிக்கப்படமாட்டாது" என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த காலத்தில் தமிழகத்தில் மின் உற்பத்தித் திறன் போதுமான அளவிற்கு நிறுவப்படாத நிலையில், எதிர்பாராதவிதமாக இந்த ஆண்டு மின் பற்றாக்குறை ஏற்பட்டு; மின்வெட்டு செய்ய வேண்டிய தவிர்க்க முடியாத சூழலில், பெரும்பாலும் விவசாயிகளையும், வீடுகளையும் பாதிக்காத அளவுக்கு கிடைக்கும் மின்சாரத்தைப் பகிர்ந்தளிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அதனையொட்டி 20.10.2008 அன்று மின்சார விநியோகக் கட்டுப்பாட்டு முறையொன்று அறிவிக்கப்பட்டது.
சீராகவும், சிக்கனமாகவும், மின்சாரம் பயன்படுத்தப்பட்டு அத்தியாவசியமான நிலையில் எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்ற நல்ல நோக்கத்துடன் அந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ள போதிலும், அதனால் 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீடுகள் பாதிக்கப்படக் கூடும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
மின்சாரத்தை வீடுகளில் பயன்படுத்துவோர் ஒரு கோடியே 30 லட்சம் பேர் என்ற எண்ணிக்கையில் நேற்று செய்த அறிவிப்பால் பாதிக்கப்படுவோர் எனப்படும் எண்ணிக்கை வெறும் 5 லட்சம் பேர் தான் எனினும், எதிர்க்கட்சிகளைச் சார்ந்தோர் குரலுக்கு மதிப்பளித்து வீடுகளுக்கு 600 யூனிட் என்பதை மாற்றி, யூனிட் கணக்கு இல்லாமல் எல்லா வீடுகளுக்குமே கூடுதல் தொகை வசூலிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.