காஞ்சி, கோவை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை!
புதன், 22 அக்டோபர் 2008 (11:45 IST)
காஞ்சிபுரம், கோவை மாவட்டங்களில் பெய்த பலத்த மழை காரணமாக இன்றும் அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 நாட்களாக தமிழகம் முழுவதும் பருவமழை பரவலாக பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழை, இன்று காலையிலும் நீடித்தது. இதனால் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) நம்பிராஜன், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து உத்தரவிட்டார்.
இதேபோல் கோவை மாவட்டத்தில் இரவு முழுவதும் கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. கோவை மாநகரில் விடிய விடிய தொடர்ந்து பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது.
காலையிலும் மழை விடாமல் பெய்ததால் மாவட்ட ஆட்சியர் பழனிகுமார், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டார்.
இந்த விடுமுறையை சனிக்கிழமை அல்லது மற்ற விடுமுறை நாட்களில் ஈடுசெய்து கொள்ளுமாறு தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார்.
இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று 2வது நாளாக விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.