ஈழத்தமிழர்களுக்கு உத‌வி கிடைக்காவிட்டால் மத்திய அரசு நேரடி நடவடிக்கை: திராவிடர் கழகம் தீர்மானம்!

செவ்வாய், 21 அக்டோபர் 2008 (11:58 IST)
ஈழத் தமிழர்களுக்கு நியாயமான உதவி கிடைக்காவிட்டால், மத்திய அரசு நேரடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று திராவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கி.வீரமணி கூறியுள்ளார்.

செ‌ன்னை‌யி‌ல் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம், தலைவர் கி.வீரமணி தலைமை நடைபெ‌ற்றது. இ‌ந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் என்பது திராவிடர் கழக கொள்கைக்கு எதிரானது என்றாலும், பிற்படுத்தப்பட்டோருக்கு ஆண்டு வருமானம் ரூ.2 1/2 லட்சத்தில் இருந்து ரூ.4 1/2 லட்சம் வரை உயர்த்தியதற்காக மத்திய அரசுக்கு பாராட்டுதலை தெரிவித்துக்கொள்கிறது. அதே போல், தாழ்த்தப்பட்டோருக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஆண்டு வருமானம் ரூ.1 1/2 லட்சம் என்று இருந்து வரும் வரம்பை உயர்த்த வேண்டும் என்றும் இக்கூட்டம் மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற சுமார் 4 கோடி பணியாளர்களுக்கு 1995-ம் ஆண்டு முதல் அளித்து வரும் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும். இந்த பிரச்சனையில் முதலமைச்சர் கருணாநிதி தலையிட்டு வலியுறுத்த வேண்டும்.

திருச்சி திருவெறும்பூரில் இயங்கி வரும் `பெல்' நிறுவனம் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வருவதை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழர்களுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை நிறுத்தாமலும், பாதிப்புக்கு ஆளாகிவரும் ஈழத் தமிழர்களுக்கு தேவையான நியாயமான உதவி கிடைக்காமல் போகும் நிலை ஏற்படுமாயின், அதற்கு அடுத்தக்கட்ட, கடுமையான நேரடி நடவடிக்கையில் ஈடுபடவும் மத்திய அரசு சற்றும் தயங்கக்கூடாது எ‌ன்று ‌‌தீ‌ர்மான‌ங்க‌ள் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்