முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், அங்கு போரை நிறுத்த வலியுறுத்தியும் சென்னை மற்றும் தமிழகத்தில் இன்று பிரமாண்டமான மனித சங்கிலி அணிவகுப்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனித சங்கிலி போராட்டத்தில் தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட பல் வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், திரையுலகினர், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்கப் போவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருவதால் இன்று நடைபெறுவதாக இருந்த மனிதசங்கிலி போராட்டம் தள்ளிவைக்கப்பட்டு வரும் 24ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.