‌மி‌ன்வெ‌‌ட்டை‌க் க‌ண்டி‌‌த்து திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு!

ஞாயிறு, 19 அக்டோபர் 2008 (14:27 IST)
மி‌ன்வெ‌ட்டை‌க் கண்டித்து ‌திருவ‌ள்ளூ‌‌ர் மாவ‌ட்ட‌த்‌தி‌ல் வரு‌ம் 21ஆ‌ம் தேதி அ.இ.அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறு‌ம் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா அ‌றி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவள்ளூர் மாவட்டத்தில் அம்பத்தூர் தொழிற்பேட்டை கும்மிடிப்பூண்டி தொழிற்பேட்டை, திருமழிசை தொழிற்பேட்டை போன்ற பல்வேறு தொழிற்பேட்டைகள் அமைந்துள்ளன மேற்படி தொழிற்பேட்டைகளில் பல்வேறு சிறிய தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இந்த தொழிற்சாலைகளை நம்பி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.

கடும் மின்வெட்டுகாரணமாக இ‌ந்த தொழிற்சாலைகளின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் பல்வேறு தொழிற்சாலைகள் மூடுகின்ற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாக, இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் வேலை இழப்பு, வருவாய் இழப்பு என பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.

செங்குன்றம் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளில் அரிசி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக வெளிச் சந்தையில் விற்கப்படும் அரிசியின் விலை மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது.

பூண்டி, கும்மிடிப்பூண்டி, கடம்பத்தூர், எல்லாபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் மின்வெட்டு காரணமாக விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய உற்பத்தி பாதிப்பு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர வழிவகுக்கும்.

கடுமையான மின் வெட்டை நடைமுறைப்படுத்தி‌க் கொண்டிருக்கின்ற தி.மு.க. அரசைக் கண்டித்தும் மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கான முயற்சியில் உடனடியாக ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தியும், அ.தி.மு.க. திருவள்ளூர் மாவட்ட ஜெயலலிதா பேரவையின் சார்பில் 21ஆ‌ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் திருவள்ளூர் நகரம், காமராஜர் சிலை எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறு‌ம்" எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.