இலங்கை உயர்மட்டக்குழு இந்தியா வருகை!

இலங்கையில் நடைபெற்று வரும் போர் குறித்து தமிழர்களின் பிரச்சனைகள் தொடர்பாக இந்தியா வெளியிட்டுள்ள கவலைகளையடுத்து அங்கு உள்ள சூழ்நிலைகளை விவரிக்க இலங்கை அரசு உயர்மட்டக் குழு ஒன்றை இந்தியா அனுப்ப முடிவு செய்துள்ளது.

இது குறித்து, இலங்கை ஊடக அமைச்சர் லக்ஷ்மண் யாபா அபயவர்தனே கூறுகையில், உயர்மட்டக் குழுவில் செல்லவுள்ள 5 எம்.பி.க்கள் மற்றும் இரண்டு மூத்த அதிகாரிகள் பெயரை இறுதி செய்யுமாறு அதிபர் ராஜபக்ஷே தனக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களாக சிங்கள ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் தீவிரமடைந்து வரும் சண்டைகளினால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் புலம் பெயர்வது குறித்த மனிதார்த்த கவலைகளை இந்தியா தொடர்ந்து வெளியிட்டுவந்ததையடுத்து இலங்கை அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளது.

ராணுவ நடவடிக்கைகளை கைவிட்டு பேச்சு வார்த்தை மூலமாக அரசியல் தீர்வு காண்பதே சிறந்தது என்று பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கனவே இலங்கைக்கு அறிவுரை கூறியிருந்தார்.

ஆனால் இலங்கை அரசு தனக்கு தமிழர்களுக்கும், விடுதலைப்புலிகளுக்குமான வித்தியாசம் தெரியும் என்று கூறியுள்ளது.

அப்பாவி தமிழர்கள் நலன்களைக் காப்பதில் சிங்கள அரசு பெரும் அக்கறை காட்டி வருவதாக இலங்கை அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

இந்த விவகாரத்தினால் இரு நாடுகளுக்கும் உள்ள சுமூகமான உறவு பாதிக்கப்படாது என்று இலங்கை கூறியுள்ளது. இந்திய அரசின் ஸ்திரத் தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த ஒரு நடவடிக்கையிலும் தங்கள் அரசு ஈடுபடாது என்று ஊடக அமைச்சர் அபயவர்தனே வலியுறுத்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்