இலங்கைத் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சிங்கள அரசை கண்டித்து நடிகர்-நடிகைகள் அடுத்த மாதம் நவம்பர் 1ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்கிறோம் என்றும் இந்த உண்ணாவிரதத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கலந்து கொள்கிறார்கள் என்றும் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து ராமேஸ்வரத்தில் வருகிற 19ஆம் தேதி திரையுல பிரமுகர்கள் நடத்தும் பேரணி, பொதுக்கூட்டத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தார்மீக ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது என்றும் அதே போல் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பிலும் போராட்டம் நடைபெற இருக்கிறது என்றார்.
தமிழக முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை வலியுறுத்தி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் வருகிற நவம்பர் 1ஆம் சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் நடிகர்-நடிகைகள் கலந்துகொள்ளும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது என்று கூறிய சரத்குமார், இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்பட அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்துகொள்வார்கள் என்றார்.
இந்த போராட்டத்திற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், வினியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, கில்ட் ஆகிய அனைத்து சங்கத்தினரும், கலையுலக சகோதர, சகோதரிகளும் ஆதரவு அளித்து உணர்வை வெளிக்காட்ட வேண்டும் என்று சரத்குமார் கேட்டுக் கொண்டார்.
உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து அமைப்புகளும் கலந்துகொள்வதால் அன்று படப்பிடிப்பு நடத்த வேண்டாம் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை கேட்டுக்கொள்ள இருக்கிறோம் என்று சரத்குமார் தெரிவித்தார்.