இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சிங்கள இராணுவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்துவிட்டு போராட்டம் நடத்தினர்.
சென்னையில் அனைத்திந்திய மாணவர் பெருமன்ற தலைவர் திருமலை தலைமையில் சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு இலங்கை அரசை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
அப்போது, இலங்கை இராணுவத்தை கண்டித்தும், அதிபர் ராஜபக்சேயை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். திடீரென பல்கலைக்கழகத்திற்குள் இருந்து ராஜபக்சேயின் உருவ பொம்மையை இழுத்து வந்த மாணவர்கள் அதற்கு தீ வைத்தனர்.
''இந்திய அரசே இலங்கையில் தமிழின படுகொலையை தடுத்து நிறுத்து, இலங்கைக்கு வழங்கும் ராணுவ உதவியை உடனே நிறுத்து, ஈழ தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண இலங்கை அரசை நிர்ப்பந்தம் செய்ய வேண்டும்'' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கோஷங்கள் எழுப்பினர்.
அதே போல மாநில கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, சிங்கள ராணுவத்தையும், அதிபர் ராஜபக்சேவையும் கடுமையாக தாக்கி கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது, ''ஈழத் தமிழர்களை பாதுகாக்க தமிழக அரசு மத்திய அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்'' என கோரிக்கை வைத்தனர்.
நந்தனம் கலை கல்லூரியிலும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு இலங்கையில் நடக்கும் தமிழர்கள் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இது போல் தமிழகம் முழுவதும் இன்று மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.