நாட்டிலேயே முதல் முறையாக 'முகவரி சான்று அட்டை' வழங்கும் சேவையை இந்திய அஞ்சல்துறை இன்று சென்னையில் துவக்கியுள்ளது.
வங்கி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், நுகர்பொருள் வழங்கு துறை, கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) தொடர்புடைய பலவகை செயல்பாடுகளுக்கு முகவரி சான்று அவசியமாகும். இத்தேவையை கருத்தில் கொண்டு அஞ்சல் துறை முகவரி சான்று அட்டையை அளிக்கும் சேவையை சென்னையில் துவக்கியுள்ளது.
18 வயது நிரம்பிய இந்திய குடிமக்கள் இந்த அட்டைப் பெற விண்ணப்பிக்க முடியும். இதற்கான விண்ணப்பம் சென்னை நகரில் உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட 94 அஞ்சலகங்களில் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ.10 ஆகும்.
இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ரூ.240 கட்டணத்துடன் அஞ்சலகத்தில் அளிக்க வேண்டும். விண்ணப்பம் தலைமை அஞ்சல் அதிகாரிக்கு அனுப்பப்பட்டு, சரிபார்க்கப்பட்ட பின் 'முகவரி சான்று அட்டை' விண்ணப்பதாரருக்கு வழங்கப்படும்.
முதல்கட்டமாக சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த அட்டை மற்ற பகுதிகளிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.