பகல் நேரங்களில் மதுக்கடையை மூட வேண்டும்: சரத்குமார்!
புதன், 15 அக்டோபர் 2008 (17:11 IST)
பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதில் முதல் கட்டமாக பகல் நேரங்களில் மதுபானக்கடைகளை மூட வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்திய அரசு பொது இடங்களில் புகைபிடிக்க தடைச்சட்டம் அமல்படுத்தி யிருப்பதை அனைத்துத் தரப்பினரும் வரவேற்றுள்ளனர். காரணம், புகைபிடிப்பதின் மூலம் பொது இடங்கள் மாசுபடுவதையும், புகை பிடிக்காதவருக்கும் உடல் நலக்கேடு விளைவதையும் இந்த சட்டத்தின் மூலம் பெருமளவு தவிர்க்க முடியும் என்பதே.
மேலும், இந்த சட்டத்தின் மூலம் அபராதம் கட்ட நேரிடும் என்ற அச்சத்தின் விளைவாக புகைபிடிப்பவர்கள் படிப்படியாக இந்த வழக் கத்தை கைவிட முடியும் என்பதும் நடைமுறை சாத்தியமே. புகைபிடிக்கும் பழக்கத்தோடு ஒப்பிடும்போது, மது அருந்தும் பழக்கம் மிக மோசமானது என்பதில் ஐயம் இல்லை. மது அருந்துவதால் உடல் நலக்கேடு என்பதை விட தனிமனித ஒழுக்கக்கேடு, பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் சீர்குலைவு, கொலை, கொள்ளை உள்ளிட்ட சமூக கலாச்சாரக் கேடுகள் என குடிப்பழக்கத்தால் ஏற்படும் தீங்குகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
ஒருவர் சிகரெட் பிடித்து விட்டு பெண்களை பலாத்காரம் செய்தார். புகைபிடிக்கும் பழக்கம் ஒரு கொலை செய்ய காரணமாக இருந்தது, புகைபிடிக்கும் பழக்கம் ஒரு குடும்பத்தையே அழித்து விட்டது என்றெல்லாம் செய்திகள் இல்லை. ஆனால், மது போதைதான் பல்வேறு சமூக குற்றங்களுக்கு காரணமாக உள்ளது என்பதை மறுக்க முடியாது.
எனவே பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதித்து மத்திய அரசு சட்டம் கொண்டு வந்திருக்கும் இந்த தருணமே, தமிழகத்தில் மது அருந்தும் பழக்கத்தை படிப்படியாக குறைத்து, மீண்டும் பூரண மதுவிலக்கை கொண்டு வர ஏற்ற தருணம் என்பதை மனதில் கொண்டு, தமிழக அரசு முதல் கட்டமாக, பகல் நேரங்களில் அரசு மதுபானக் கடைகளை மூடி விற்பனையை நிறுத்த வேண்டும்.
இதனால் பகல் நேரங்களில் குடித்து விட்டு அலுவலகம் செல்வது, பேருந்துகளில் சக பயணிகளுக்கு உண்டாகும் இடைஞ்சல்கள் போன்ற பல பகல் நேரக்குற்றங்களை குறைக்கலாம்.
'மதுவினால் மக்களின் வாழ்க்கை சீரழியும் நிலையை நெஞ்சார உணர்ந்து, மதுக்கடைகளைத் திறந்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் தான் ஆட்சியைத் தொடர வேண்டும் என்ற நிலை வந்தால் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு நடையைக் கட்டுவேனே தவிர எனது ஆட்சியில் மதுவுக்கே இடமில்லை' என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் தான் பதவியில் இருந்தவரை மது விலக்கு கொள்கையில் உறுதியாயிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் கனவுகளை நனவாக்குவதே தனது ஆட்சியின் லட்சியம் என்று தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் முதல்வர் கருணாநிதி, தமிழகம் முழுவதும் அண்ணா நூற்றாண்டு விழா கொண்டா டப்பட்டு வரும் இந்த நேரத்தில் எங்கள் கோரிக்கையை ஏற்று பூரண மதுவிலக்கை மீண்டும் தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்.
அதன் முதல் கட்டமாக பகல் நேரங்களில் மது விற்பனையை நிறுத்தும் விதமாக அரசு மதுபானக் கடைகளை மூட உத்தர விடவேண்டும்'' என்று சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.