ராமர் பாலம் வழிபாட்டு இடம் அல்ல-அரசு!

புதன், 15 அக்டோபர் 2008 (04:26 IST)
சேதுசமுத்திர திட்ட சர்ச்சையில் புதிய திருப்பம் ஏற்படுத்தும் விதமாக, ராமர் சேது பாலம் இந்து மதத்தின் உள்ளார்ந்த, முக்கியமான அங்கமாக இருக்கவில்லை என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

"ராமர் பாலத்தை ராமரே அழித்து விடவில்லை என்ற இந்துக்களின் நம்பிக்கையும் சந்தேகமற நிரூபிக்கப்படவில்லை, அல்லது மீதமுள்ள ராமர் பாலமும் வழிபாட்டிற்கான இந்து சமயத்தின் ஒரு உள்ளார்ந்த, முக்கியமான அங்கமாக இருந்திருக்கிறது என்பதும் நிரூபிக்கப்படவில்லை", என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திற்கு தனது எழுத்துபூர்வ பதிலில் கூறியுள்ளது.

கடந்த ஜூலை 30ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையில் 'ராமர்சேது' விற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் சேது சமுத்திரத் திட்டத்தை மாற்று வழியில் தொடருவது பற்றி மத்திய அரசு நீதிமன்றத்திற்கு உத்தரவாதம் அளித்திருந்தது. இதற்காக பிரதமர் அலுவலகம் நிபுணர் குழு ஒன்றையும் அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், ராமர் பாலம் அல்லது ஆடம்ஸ் பாலம் ராமராலேயே உடைக்கப்பட்டு விட்டது, உடைக்கப்பட்ட ஒன்றை வழிபட முடியாது என்ற வாதத்தை மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

"ஒரு சமயத்தின் உள்ளார்ந்த, முக்கியமான அங்கமாக இல்லாத எந்த ஒரு சமய நம்பிக்கை அல்லது செயல்பாட்டையும் இந்திய அரசியல் சட்டம் 25 அல்லது 26ஆவது பிரிவின் கீழ் பாதுகாக்க முடியாது" என்று கூறியுள்ள மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகள் பலவற்றையும் தங்களுக்குச் சாதகமாக உதாரணமாகக் காட்டியுள்ளது.

மத்திய அரசு மீண்டும் அ.இ.அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதாவை சாடியுள்ளது. அதாவது இந்த திட்டத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது என்று அனுமதி பெற்றுத் தந்தது ஜெயலலிதா அரசுதான் ஆனால் தற்போது மத அடிப்படையில் இந்த திட்டத்தை எதிர்த்து அரசியல் செய்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளது.

மேலும் 2001ஆம் ஆண்டு தமிழக சட்ட மன்றத் தேர்தலின் போது சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்ததையும் மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

மத்திய அரசின் இந்த அறிக்கை குறித்து பா.ஜ.கட்சியைச் சேர்ந்த அருண் ஜெட்லீ கடும் விமர்சனம் வைத்துள்ளார். அதாவது எந்த ஒன்றும் ஒரு மதத்தின் நம்பிக்கையில் உள்ளார்ந்த அல்லது முக்கியமான அங்கம் வகிக்கவில்லை என்று கூறுவதற்கு அரசிற்கு அதிகாரமில்லை என்று கூறியுள்ளார் அருண் ஜெட்லி.

வெப்துனியாவைப் படிக்கவும்