அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசிற்கு எச்சரிக்கை!

செவ்வாய், 14 அக்டோபர் 2008 (22:39 IST)
சென்னை: சென்னையில் இன்று முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் செய்துவரும் வன்முறைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லையெனில் தமிழக நாடாளு மன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன.

இதில் இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதாவது தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், 2 வார காலத்திற்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும், அப்படியில்லையெனில் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் நாடாளு மன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை துறப்பார்கள் என்று தீர்மானம் நிறைவெற்றப்பட்டுள்ளது.

இலங்கை ராணுவத்திற்கு இந்தியா ஆயுதங்கள் அனுப்புவதாக வரும் பத்திரிக்கை செய்திகளை மேற்கோள் காட்டி, உடனடியாக இதனை நிறுத்த வேண்டும் என்று மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் மத்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு மனிதார்த்த உதவிகளை அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்