மின்வெட்டை கண்டித்து திருவண்ணாமலையில் நாளை ஆர்ப்பாட்டம்: ஜெ.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடுமையான மின்வெட்டை அமல்படுத்தியுள்ள தி.மு.க அரசைக் கண்டித்து, அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
webdunia photo
FILE
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆற்காடு வீராசாமியின் அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டின் காரணமாக விவசாயத்தை பெரிதும் நம்பியுள்ள மாவட்டமான திருவண்ணாமலை இருளில் மூழ்கியுள்ளது. கடுமையான மின்வெட்டின் காரணமாக விவசாயிகள் தங்கள் தொழிலை சரிவர செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சிறுதொழில் நிறுவனங்கள், அறவை ஆலைகள், அரிசி ஆலைகள் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதால், மாணவ- மாணவிகளால் படிக்கவும், தூங்கவும் முடியவில்லை என்பதுடன் அவர்களுடைய கல்வியும் பாதிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் தமிழகத்தின் எதிர்காலமே கேள்விக் குறியாக உள்ளது.
இதற்கு காரணமான தி.மு.க அரசின் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் மின்சார வெட்டுத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆகியோர் பதவி விலக வலியுறுத்தியும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில், நாளை காலை 10 மணியளவில், திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும்'' என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.