ஈழ‌த் த‌மிழ‌ர்களை அ‌‌ழி‌க்க இ‌ந்‌திய அரசு உத‌வி: வைகோ கு‌ற்ற‌ச்சா‌ற்று!

செவ்வாய், 14 அக்டோபர் 2008 (10:05 IST)
''ஈழ‌த் த‌மி‌‌ழ் இன‌த்தை கூ‌‌ண்டோடு அழ‌ி‌க்க ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் தலைமை‌யிலான ஐ‌க்‌கிய மு‌ற்போ‌க்கு கூ‌ட்ட‌ணி அரசு மறைமுகமாகவு‌ம், நேரடியாகவு‌ம் ‌சி‌றில‌ங்க அரசு‌க்கு உதவு‌கிறது, ஆயுத‌ம் அனு‌ப்பு‌கிறது'' எ‌ன்று ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''இலங்கை தீவில் ராஜபக்சே அரசு கொடூரமாக திட்டமிட்டு ஈழத் தமிழ் இனத்தை கூண்டோடு அழிக்க முனைந்து முப்படை தாக்குதலையும், இனப்படுகொலையையும் நடத்துவதற்கு இந்திய அரசு, டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மறைமுகமாவும், நேரடியாகவும் உதவுகிறது. ஆயுதம் அனுப்புகிறது.

2004ஆம் ஆண்டு இந்திய அரசு, இலங்கையுடன் ராணுவ ஒப்பந்தம் போட முயன்றபோது அதைத் தடுக்க ம.தி.மு.க. போராடியது. பிரதமரை, காங்கிரஸ் கட்சியின் தலைவரை, காங்கிரஸ் அமைச்சர்களை நேரடியாக சந்தித்து ஆட்சேபணை அறிக்கை கொடுத்தேன். பொதுவுடமை கட்சி தலைவர்களை சந்தித்தேன். அவர்கள் ராணுவ ஒப்பந்தத்தை எதிர்த்தனர்.

முதலமைச்சர் கருணாநிதி கூட்டும் கூட்டத்தை நாங்கள் புறக்கணிப்பது பற்றி விடம் தோய்ந்த வார்த்தைகளை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வீசியுள்ளார். ஈழ‌த் தமிழர்களின் கண்ணீரைத் துடைக்க எந்த தியாகத்திற்கும் ஆட்படுத்திக் கொள்ளும் அர்ப்பணிப்பு இயக்கமான ம.தி.மு.க.வின் நிலைப்பாட்டை தெரிவிக்க விரும்புகிறேன்.

டெல்லியில் பெரியார் மையம் இடிக்கப்பட்டபோது தொலைபேசியில் வீரமணி சொன்ன மாத்திரத்தில் அதை தடுக்கப் போராடியவன் நான். இடிக்கப்பட்ட மையத்தை நேரில் பார்த்துவிட்டு அன்றை உள்துறை அமைச்சரிடம் குமுறியவன் நான். அன்றைய பிரதமர் வாஜ்பாயிடம் கடுமையாக வாதாடி இடிக்கப்பட்ட மையத்தின் மதிப்பைவிட பன்மடங்கு விலை மதிப்புள்ள இடத்தை புதிதாக பெரியார் மையம் எழுப்ப அனுமதி பெற்றுத் தந்தவனும் அடியேன்.

2005ஆம் ஆண்டு ஜனவரியில் ஈழ‌த் தமிழரை பாதுகாக்க பெரியார் திடலில் கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்ற முடிவெடுத்து வீரமணி கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியபோது தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் கடிதம் எழுதி அதில் அவராவது அல்லது அவரின் பிரதிநிதியாவது கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அதற்கு கருணாநிதி பதில் கூட அனுப்பவில்லை. ஜனவரி 29ஆ‌ம் தேதி பெரியார் திடலில் நடைபெற்ற கூட்டத்தில் பழ.நெடுமாறனும், டாக்டர் ராமதாசும், நானும் கலந்துகொண்டோம். தி.மு.க. பங்கேற்காதது குறித்து வீரமணி விமர்சனம் செய்தது உண்டா?

நேற்று கூட இலங்கை அதிபரின் சகோதரரும், ஆலோசகருமான பாசில் ராஜபக்சே கூறுகையில், இலங்கையில் எங்கள் ராணுவ நடவடிக்கைகளுக்கும், விடுதலைப்புலிகள் நசுக்குவதற்கும் இந்தியா முழு அளவில் உதவி வருகிறது என்று ஆணவத்தோடு சொன்னார். இதனால், இந்திய அரசின் துரோகம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது'' எ‌ன்று வைகோ கூ‌‌றியு‌ள்ளா‌ர்.