கோடியக்கரையில் மீன்பிடி சீசன் தொடங்கியது!

திங்கள், 13 அக்டோபர் 2008 (13:39 IST)
கோடியக்கரை பகுதியில் மீன்பிடி சீசன் துவங்கியுள்ளதால் வெளியூர் மீனவர்கள் அதிகளவில் வரத்தொடங்கியுள்ளனர்.

நாகை மாவட்டம், கோடியக்கரை பகுதியில் அக்டோபர் மாதம் தொடங்கும் மீன்பிடி சீசன் மார்ச் வரை நீடிக்கும். இந்த நாட்களில் வெளியூர்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் மீனவர்கள் இங்கு வருவர். கோடியக்கரை பகுதியில் வாடல் காற்று வீச தொடங்கியுள்ளதால் மீன்கள் அதிகளவில் கிடைக்கும் என மீனவர்கள் நம்புகின்றனர்.

இதையடுத்து நாகை, பாம்பன், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கீழவைப்பர், அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீனவர்கள் கோடியக்கரைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

இதுவரை 50 பைபர் படகுகள், 25 கட்டு மரங்கள் வந்துள்ளன. மேலும், 500 பைபர் படகுகள் வரை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியூர்களில் இருந்து வரும் மீனவர்களுக்காக அனைத்து வசதிகளையும் உள்ளூர் மீனவர்கள் செய்து வருகின்றனர். இந்த சீசனில் கோடியக்கரையில் தினமும் ரூ.10 லட்சம் வரை வியாபாரம் நடக்கும் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்