இந்தியா மேற்பார்வையில் அமைதிப்பேச்சு : ராமதாஸ் வ‌லியுறு‌த்த‌ல்!

வெள்ளி, 10 அக்டோபர் 2008 (16:47 IST)
இலங்கை தமிழர் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர, இந்திய அரசின் மேற்பார்வையில் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.

webdunia photoFILE
இப்பிரச்சினை குறித்து வரும் 14ஆம் தேதி நடைபெறவிருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பா.ம.க. சார்பில் அதன் தலைவர் ஜி.கே. மணி கலந்து கொள்வார் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திண்டிவனம் தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களுக்கு ராமதாஸ் பேட்டியளித்தார்.

இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக வருகிற 14-ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கலந்து கொள்வார்.

அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும். மத்திய அரசு இந்த பிரச்சினையில் என்ன செய்ய வேண்டும் என்பதை இக்கூட்டத்தில் முடிவு செய்து, அதை அறிவிப்போடு இல்லாமல் ஒரு காலக்கெடுவுக்குள் அந்த முடிவுகளை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இலங்கையில் போர் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு இந்தியாவின் மேற்பார்வையில் அமைதிப் பேச்சு வார்த்தை தொடங்கப்பட வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தினார்.