பெரம்பலூர் அதிமுக செயலாளர் திடீர் நீக்கம்

வியாழன், 9 அக்டோபர் 2008 (16:19 IST)
பெரம்பலூர் மாவட்ட அஇஅதிமுக செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இளவரசனை செயலாளர் பதவியில் இருந்து நீக்கி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று உத்தரவிட்டுள்ளார்.

துணைச் செயலாளர் பொறுப்பு வகித்த ப. இளவழகன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இத்தகவலை ஜெயலலிதா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட கவுன்சில் 6வது வார்டுக்கு அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அக்கட்சிக்கு 10,219 வாக்குகளும், பாமகவுக்கு 9,523 வாக்குகளும், அஇஅதிமுகவுக்கு 3,518 வாக்குகளும் கிடைத்தன.

தேர்தல் முடிவுகளில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டதோடு, டெபாசிட்டும் இழந்தது. இதற்கு காரணம், இளவரசன் சரிவர செயல்படவில்லை என்று கட்சி நிர்வாகிகள் தலைமையிடம் புகார் செய்ததன் பேரிலேயே இளவரசனை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து ஜெயலலிதா நீக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவைக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தலுக்கு கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்கச் செய்யும் நோக்கிலேயே இந்த நடவடிக்கையை ஜெயலலிதா எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்