மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதை அடுத்து, அங்கு கோயில் குடமுழுக்கு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்புரம் கிராமத்தில் இரு பிரிவினர் இடையே அவ்வப்போது மோதல் உண்டாகி பதற்றம் ஏற்பட்டு வருகிறது. அங்குள்ள முத்தாலம்மன் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டதை அடுத்து, கோயிலின் மதிற்சுவருக்கு ஒரு பிரிவினர் வெள்ளை அடித்தனர். இந்த சுவர் பொது இடத்தில் இருப்பதாகக் கூறி மற்றொரு பிரிவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் மீண்டும் மோதல் உண்டாகும் சூழ்நிலை உருவானது. நாட்டு வெடிகுண்டுகளை வீசி இரு தரப்பினரும் மோதிக்கொள்ள முயன்றதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதற்றம் நீடித்து வரும் சூழ்நிலையில் வரும் 9, 10 ஆம் தேதிகளில் கோயில் குடமுழுக்கு நடத்துவதற்கு காவல்துறையினரின் அனுமதியைக் கேட்டனர். இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து, வேறு தேதியில் குடமுழுக்கு நடத்தும்படி ஆலோசனை கூறினர்.