சிறிலங்க அதிபர் ராஜபக்சேயை பிரதமர் எச்சரிக்க வேண்டும்: இராமதாஸ்!

செவ்வாய், 7 அக்டோபர் 2008 (20:36 IST)
இலங்கையில் தமிழர்கள் மீது இராணுவத்தை ஏவி இனப் படுகொலை நடத்திவரும் அதிபர் ராஜபக்சேயை பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் இராமதாஸ் கூறியுள்ளார்.

இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும், அதற்கு டெல்லியிலுள்ள இலங்கைத் தூதரை அழைத்து கண்டனம் தெரிவிப்பதனால் எந்தப் பயனும் இல்லை, சிறிலங்க அதிபர் ராஜபக்சேயை தொலைபேசியில் அழைத்து பிரதமர் எச்சரிக்கவேண்டும் என்று இன்று விடுத்துள்ள அறிக்கையில் இராமதாஸ் கூறியுள்ளார்.

இலங்கையில் இராணுவத்தினர் நடத்திவரும் தாக்குதலில் தமிழர்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை முழுமையாக அறிய, தமிழர் தேச கூட்டணியைச் சேர்ந்த 22 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு அழைக்க வேண்டும் என்றும், அவர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரையும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து பேச வைக்க வேண்டும் என்றும் இராமதாஸ் கூறியுள்ளார்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழர்கள் மீது அந்நாட்டு இராணுவம் எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை முழுமையாக அறிய நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சிக்களையும் சேர்ந்த உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள இராமதாஸ், அவர்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக உள்ள தமிழர்களை சந்தித்துப் பேசி, அதன் அடிப்படையில் ஒரு அறிக்கைத் தயாரித்து மத்திய அரசிற்கு வழங்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அதற்கு முன்னர், அவர்களின் துயர் துடைக்க உடனடியாக மனிதாபிமான உதவிகளை வழங்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர்களை இனப்படுகொலை நடத்திவரும் சிறிலங்க அரசிற்கு எதிராக தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் அனைத்தையும் தமிழக முதல்வரே முன்னின்று ஓரணியில் திரட்ட வேண்டும் என்றும் இராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்