சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் கடந்த 50 ஆண்டுகளாக தமிழர்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். இதனை தடுத்து நிறுத்த கோரி சொல்லப்பட்ட எந்த கருத்தையும் இலங்கை அரசு ஏற்கவில்லை என்றார்.
இலங்கை தமிழர் பிரச்சனையில் பிரதமர் தலையிட கோரி தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று கூறிய அவர் முதலில் இலங்கையில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.
இந்தப் பிரச்சினையில் தீர்வு காண முன்னாள் பிரதமர் நேரு, இந்திரா காந்தி, சாஸ்திரி, ராஜீவ் காந்தி காலங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்களையும் இலங்கை அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்று குற்றம்சாற்றிய அவர் இந்த பிரச்சனைக்கு இலங்கை அரசு தான் தீர்வுத் திட்டத்தை முன் வைக்க வேண்டும் என்றும் அது ஏற்புடையதா இல்லையா என்பதை பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறினார்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் முதலமைச்சர் கருணாநிதி எடுத்த நிலைப்பாட்டை வரவேற்பதாக கூறிய அவர், மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகிப்பதால் அதற்காகவாவது முதலமைச்சர் கருணாநிதியின் குரலுக்கு மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும் என்று தா. பாண்டியன் கூறினார்.