சத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பல சமயங்களில் சாதாரணமாக இவைகள் ரோட்டை கடப்பதை காண முடிகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, செந்நாய், காட்டெருமை. கரடி மற்றும் மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக வசித்து வருகிறது.
webdunia photo
WD
இவைகள் காட்டிலுள்ள உணவுகளை உண்டு அங்குள்ள குளம், குட்டைகளில் இருக்கும் தண்ணீரை குடித்துவிட்டு யாருக்கும் இடையூறு இல்லாம் வாழ்ந்து வருகின்றது.
காட்டுக்குள் வசிக்கும் இந்த வனவிலங்குகளை மனிதன் பார்க்க வேண்டும் எனில் வனப்பகுதிக்குள் தண்ணீர் இல்லாமல் வனத்தின் ஓரத்தில் இருக்கும் கிராமங்களுக்கு இவைகள் தண்ணீர் தேடி வரும் போதும் தண்ணீருக்காக சாலையை கடக்கும்போதும் மட்டுமே மனிதர்களின் கண்ணில் தென்படும்.
தற்போது சத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு சாட்சியாக சத்தியமங்கலம் பண்ணாரி அடுத்து திம்பம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காட்டெருமைகள் ஓரத்தின் நின்று மேய்ந்துகொண்டிருப்பதையும் இவைகள் சர்வசாதாரணமாக சாலையை கடப்பதையும் காணமுடிகிறது.
இதற்கிடையில் சத்தியமங்கலம் வனப்பகுதி குறிப்பாக தலமலை, கேர்மாளம், கூலித்துறைப்பட்டி உள்ளிட்ட பகுதியில் புலிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. புலிகள் மான்களை வேட்டையாடுவதைவிட காட்டெருமையை வேட்டையாடுவதையே விரும்பும். காரணம் காட்டெருமை சாதாரணமாக ஒரு டன் வரை எடையிருக்கும். ஆகவே இதை வேட்டையாடுவதன் மூலம் தன் குடும்பத்திற்கு உணவு பிரச்சனை தீர்ந்துவிடும் என்பதால் புலி காட்டெருமையை குறி வைப்பதாக வனவிலங்கு ஆராய்ச்சியாளர் சிவசுப்பிரமணியம் கூறினார்.
தலமலை வனப்பகுதியில் புலிக்கு உணவாகிய காட்டெருமையின் மண்டை ஓட்டை சாதாரணமாக காண முடிந்தது. சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் ஆறு முதல் பத்து புலிகள் இருக்கலாம் என வனத்துறையினர் கணக்கிட்டுள்ளனர்.