கல்லூரி மாணவர்களுக்கு இலவச வேலை வாய்ப்பு முகாம்: தமிழக அரசு ஏற்பாடு!
செவ்வாய், 7 அக்டோபர் 2008 (15:17 IST)
சென்னை மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயின்று பட்டம் பெற்ற மாணவர்களுக்கான இலவச வேலைவாய்ப்பு முகாம் வரும் 10,11ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் இயங்கி வரும் வேலைவாய்ப்பு பிரிவு சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஒரு வேலைவாய்ப்பு முகாமினை சென்னை மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயின்று பட்டம் பெற்ற மாணவர்களுக்காக நடத்த திட்டமிட்டுள்ளது.
சென்னை நகரையும், அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயின்று பட்டம் பெற்ற ஆண்கள் சுமார் 600 பேருக்கு விற்பனை அதிகாரிகளாக பணி நியமனம் அளிக்க இந்தியாவின் முன்னணி தொலை தொடர்பு குழுமம் முன்வந்துள்ளது.
இவர்களை தேர்ந்தெடுக்க ஏதுவாக வரும் 10, 11ஆகிய இரு நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் சென்னை-39, வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடத்தப்படும்.
முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களின் தன்விவர படிவத்தை (Resume) கொண்டு வருதல் வேண்டும். முகாமில் கலந்து கொள்ள நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை" என்று கூறப்பட்டுள்ளது.