கோவையில் ரஜினி ரசிகர்கள் ஒன்றுகூடி ‘தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்‘ என்ற கட்சியை தொடங்கி உள்ளனர். இதற்கு ரஜினிகாந்த் அனுமதி கொடுக்காவிட்டால் சென்னையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
webdunia photo
WD
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் அக்டோபர் 15ஆம் தேதி முதல் ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்தநிலையில் கோவை மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் 'தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்' என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளனர். மேலே சிவப்பு, நடுவில் வெள்ளை, அடியில் கறுப்பு என்ற மூவர்ண கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். நடுவில் உள்ள வெள்ளை நிறத்தில் ரஜினிகாந்த் உருவம் பொறித்த நட்சத்திரம் பொறிக்கப்பட்டுள்ளது.
கட்சி பெயரை பதிவு செய்வதற்கான முயற்சியிலும் அவர்கள் இறங்கியுள்ளனர். பெரிய அளவிலான விளம்பர பலகைகள் கோவை முழுவதும் ஆங்காங்கே ரசிகர்கள் வைத்துள்ளனர்.
இது குறித்து கோவை தெற்கு மாவட்ட ரஜினிகாந்த் மன்ற செயலாளர் ராஜா, துணைச் செயலாளர் அபு, மதுக்கரை பேரூராட்சி 1வது வார்டு உறுப்பினர் ரஜினி பாபு, பொதுக்குழு உறுப்பினர் நந்தகுமார் ஆகியோர் கூறுகையில், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என காத்திருந்து ஏமாந்துவிட்டோம். ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் புதிய கட்சிகளுக்கு சென்றுவிட்டனர்.
webdunia photo
WD
ரசிகர்களை சிதறவிடாமல் தடுக்க நாமும் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என தலைவரிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் மவுனம் சாதிக்கிறார். அவர் காலம் தாழ்த்துவது தமிழக மக்களுக்கு ஆபத்து. நாங்கள் 15 வயதில் ரசிகர் மன்றத்தில் சேர்ந்தோம். இன்று 40 வயதை தாண்டி விட்டோம். எத்தனை நாளைக்குத்தான் ரஜினி ரசிகராகவே இருப்பது. அரசியல் முத்திரை இருந்தால் மட்டுமே மக்களுக்கு மிக எளிதாக சேவை செய்ய முடியும்.
எனவே நாங்களாகவே புதிய கட்சியை துவக்கி விட்டோம். அடுத்த வாரத்தில் தலைவர் எங்களை சந்திக்கும்போது கட்சித் துவங்குவதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிடும்படி வலியுறுத்துவோம். மறுத்தால் அனைத்து மாவட்ட ரசிகர்களும் ஒன்றுகூடி தொடர் உண்ணாவிரதம் இருப்போம் என்றனர்.