தமிழனை காப்ப‌‌திலாவது ஒன்றுபடுவோ‌ம்: கருணாநிதி!

செவ்வாய், 7 அக்டோபர் 2008 (11:43 IST)
''இல‌ங்கை‌யி‌ல் சாகிற தமிழனை காப்பாற்றுகின்ற விடயத்திலாவது, நாம் எல்லோரும் ஒன்றுபட்டு இருப்போம் எ‌ன்று‌ம் நமக்குள்ளே சச்சரவுகள் தேவையில்லை எ‌ன்று‌ம் நாம் ஒன்றுபட்ட நிலையிலே எந்த கசப்புகளும், எந்த மன வேறுபாடுகளும் இல்லாமல் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'' என முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை கு‌றி‌த்து ‌தி.மு.க.‌வி‌ன் ‌நிலை கு‌றி‌த்து, ‌விள‌க்க செ‌ன்னை ம‌யிலா‌ப்பூ‌ர் மா‌ங்கொ‌ல்லை‌யி‌ல் நட‌ந்த பொது‌க் கூ‌‌ட்ட‌த்த‌ி‌ல் பே‌சிய முதலமைச்சர் கருணாநிதி, இலங்கையில் காந்தியடிகளைப் போன்ற உருவம், ஆனால் பெரியாரை போன்ற உள்ளம் கொண்ட செல்வா தொடங்கியதுதான் உரிமை போராட்டம். அதற்கான ஆதரவு கேட்டு தமிழகத்திற்கு வந்தார். இங்கு வந்த போது அவரோடு அமிர்தலிங்கமும் வந்தார். இவர்கள் எல்லாம் இன்று இல்லை. இவர்கள் இல்லாமல் போனதற்கான காரணங்களை நான் ஆராய விரும்பவும் இல்லை எ‌ன்றா‌ர்.

செல்வா காலத்திற்கு பிறகு அங்கு இளைஞர்கள் தோன்றினார்கள். அந்த இளைஞர்கள்தான் சிறைச்சாலையிலே உயிர் நீத்தார்கள். அப்படிப்பட்டவர்களுடைய தியாகம் அவர்கள் நினைத்த விடுதலை உணர்வு இன்றளவும் பட்டுப்போகாமல் இலங்கையில் இருக்கிறது எ‌ன்று கூ‌றினா‌ர்.

''ஆனால் முழு விடுதலைதான் வேண்டுமா? இலங்கையில் இருந்து தனி ஈழம் பிரிந்துதான் தீர வேண்டுமா? இது விவாதத்திற்குரிய விடயம். நெடுநாளாக விவாதிக்கப்படுகிறது. இதற்கிடையில் எத்தனையோ சமாதான குழுக்கள் வந்துள்ளன. நார்வே உள்ளிட்ட பல நாடுகள், அறிவாளிகள், சமரச தூதுவர்கள், சமரசம் செய்ய வந்த நாடுகள் என அத்தனை பேரும் முயன்றும் கூட அங்கே இன்னும் சமரசம் ஏற்படவில்லை. ஒருவேளை, தமிழனின் ரத்தம் முழுவதும் இலங்கை தீவிலே அபிஷேகிக்கப்பட்டால்தான் அதற்கு பிறகுதான் சமரசம் வரும் என்ற செடி இலங்கையிலே முளைக்குமோ என்னவோ, எனக்கு தெரியவில்லை'' எ‌ன்று வேதனையுட‌ன் கூ‌றினா‌ர் கருணா‌நி‌தி.

அத்தகைய ரத்த அபிஷேகம் நடைபெறாமலேயே அங்கே புரட்சிப்பூ, புதுமைப்பூ, ஜனநாயகப்பூ, விடுதலைப்பூ, மறுமலர்ச்சிப்பூ, உரிமைப்பூ தமிழர்களின் வாழ்வுப்பூ அங்கே பூக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை, தி.மு.க.வின் கருத்துமாகும் எ‌ன்று கூ‌றிய கருணா‌நி‌தி, அந்த கருத்தை வெற்றி பெற செய்ய இந்தியாவிலே இருக்கின்ற தலைவர்கள், தமிழகத்திலே இருக்கின்ற தலைவர்கள் எல்லாம் முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளத்தான் இந்த பொதுக்கூட்டத்தில் வேண்டுகோளாக விடுக்கிறேன் எ‌ன்றா‌ர்.

''இந்த ஒரு விடயத்திலாவது சாகிற தமிழனை காப்பாற்றுகின்ற விடயத்திலாவது, நாம் எல்லோரும் ஒன்றுபட்டு இருப்போம். நமக்குள்ளே சச்சரவுகள் தேவையில்லை. நாம் ஒன்றுபட்ட நிலையிலே இந்த பிரச்சனையை அணுகுவோம். எந்த கசப்புகளும், எந்த மன வேறுபாடுகளும் இல்லாமல் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'' எ‌ன்று கருணா‌நி‌தி வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்தா‌ர்.

''உள்ளத்தால் ஒருவரே, வெள்ளம் போல் தமிழர் கூட்டம்...'' என்ற புரட்சி கவிஞர் பாரதிதாசனின் கவி வரிகளை நிறைவேறும் நாளை நான் எதிர்பார்க்கிறேன். அந்த நாள் உருவாக வேண்டும் என்றுதான் நான் தவம் இருக்கிறேன். அந்த தவம் பலிக்க வேண்டும். அது இதுவரையிலும் பலிக்காவிட்டாலும் கூட, ஈழத்தமிழர் பிரச்சனையிலாவது அந்த தவம் பலித்து அனைவரும் தமிழர்கள்தான், தமிழர்களுக்கு ஒரு தீங்கு வந்தால் எல்லாரும் கேடயங்களாக இருந்து அந்த தீங்கை தாக்குவோம். அந்த பகையை வெல்லுவோம் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும் எ‌ன்று கூ‌றினா‌ர் கருணா‌நி‌தி.

தனி ஒருவனாக நின்று இந்த காரியத்தை சாதிக்க முடியும் என்று நான் சொன்னால் என்னை விட இறுமாப்பு உள்ளவன் யாரும் இருக்கமுடியாது எ‌ன்று கூ‌றிய கருணா‌நி‌தி, ஆகவே தமிழர்கள் அனைவரும் ஒரே உருவில், ஒரே வடிவில், ஒரே உணர்வில் நின்று இந்த ஆபத்துக்கு விடை காண்போம். இந்திய அரசு ஒத்துழைக்கும் என்று நம்புவோம். நம்பினால் நாம் வெற்றிபெறுவோம். அவர்கள் ஒத்துழைத்தால் நமக்கு வாழ்வு உண்டு. ஒத்துழைக்காவிட்டால் இலங்கை தமிழர்கள் மாத்திரமல்ல, இங்குள்ள தமிழர்களும் அடியோடு சாவோம். இதைத்தவிர வேறு எதையும் சொல்ல விரும்பவில்லை எ‌ன்றா‌ர்.

''இந்த கூட்டத்தோடு இந்த போராட்டம் முடிவதல்ல, நமது குரல் இதோடு நிற்பதல்ல, வேறு வழியோசிப்போம். பிரதமரும், சோனியாகாந்தியும் இலங்கை‌த் தமிழர்கள் மீது காட்டுகின்ற கருணையை, அன்பை, பாசத்தை, மனிதநேயத்தை இலங்கை‌த் தமிழர்களுக்கும் மட்டுமல்ல உலகமெங்கும் உள்ள மனிதர்களிடம் காட்டவேண்டிய மனிநேயத்தை இலங்கை தமிழர்கள் மீதும் காட்டுவார்கள் என்ற நம்பிக்கை இரு‌க்‌கிறது'' எ‌ன்று கருணா‌நி‌தி பே‌சினா‌ர்.