''பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சிக்கும் அருகதை அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு கிடையாது'' என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு கடுமையாக தாக்கியுள்ளார்.
webdunia photo
FILE
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டியும், அதில் மத்திய அரசு தலையிட்டு தமிழர்களுடைய பாதுகாப்புக்கும், வாழ்வுரிமைக்கும் உரிய நடவடிக்கையை எடுக்க உதவிடுமாறும் பிரதமரை கேட்டுக்கொள்கிறேன்.
சோனியாகாந்தி தலைமையில் டெல்லியில் கடந்த மாதம் செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட நான், இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு பாதுகாப்பு வேண்டும், தமிழர்களுக்கு எதிரான செயல்பாட்டுக்கு நாம் உதவிடக்கூடாது என்று கூறினேன்.
பிரதமர் மன்மோகன் சிங்கை, ஜெயலலிதா கடுமையாக விமர்சித்துள்ளாரே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த தங்கபாலு, "பிரதமர் மன்மோகன்சிங்கை விமர்சிக்கும் அருகதை ஜெயலலிதாவுக்கு கிடையாது என்றும் நாட்டின் பிரதமர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் யாருக்கும் தாசனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எப்போதுமே இந்திய மக்களின் தாசனாகத்தான் இருக்கிறார் என்றார்.
பிரதமருக்கு தந்திகள் அனுப்ப வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறிய கருத்துக்கு, பா.ம.க தலைவர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளாரே. இதில் காங்கிரசின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்விக்கு, ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு உண்டு. அதன்படி தி.மு.க தலைவர் தனது நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார் தங்கபாலு.
அகதிகளுக்கு உணவுப் பற்றாக்குறை நிலவுவதாக சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த தங்கபாலு, "5 லட்சம் அகதிகளுக்கும் பாதுகாப்பும், சரியான உணவும் கிடைக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. இதையே தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சியினரும் கூறுகின்றனர்' என்றார்.