இலங்கையில் தமிழர்கள் மீதான ராணுவத் தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய அரசு தலையிடக்கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தந்திகள் அனுப்புமாறு முதலமைச்சர் கருணாநிதி விடுத்த வேண்டு கோளை ஏற்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் தந்திகள் அனுப்பி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்ட தி.மு.க துணை செயலரும், கண்டமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செ.புஷ்பராஜ் தலைமையில் 300க்கும் மேற்பட்டவர்கள் பிரதமருக்கு இன்று தந்தி அனுப்பினர்.
கடலூர் நகர தி.மு.க இளைஞரணி சார்பில் அதன் அமைப்பாளர் பழக்கடை ராஜா தலைமையில் 200 பேர் இன்று பிரதமருக்கு தந்தி அனுப்பினார்.
இதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலர்கள் இன்று அந்தந்த மாவட்டங்களில் தந்தி அனுப்பினர். இவர்களுடன் சேர்ந்து பொது மக்களும் தந்தி அனுப்பினார்கள்.
சென்னையில் அண்ணாசாலை தபால் அலுவலகத்தில் தென்சென்னை மாவட்ட செயலர் ஜெ.அன்பழகன் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தந்தி அனுப்பினர். வடசென்னை மாவட்ட செயலர் பலராமன் தலைமையில் 3,000 தி.மு.க. தொண்டர்கள் தந்தி அனுப்பி உள்ளனர்.