ஊனமுற்றவர்கள் நலனில் தான் ஒருவர் மட்டும்தான் அக்கறையோடு இருப்பதுபோல சுய விளம்பர நோக்கத்தோடு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பேசி இருப்பதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் குற்றம்சாற்றியுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தே.மு.தி.க. சார்பில் பார்வையற்றோருக்கு கணினி வேலை வாய்ப்பு பயிற்சியை தொடங்கி வைத்து பேசிய விஜயகாந்த், ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவேன். என்னைப் பார்த்து போட்டி போடும் மற்ற கட்சிகள் இது போன்ற உதவிகளைச் செய்வதிலும் போட்டி போட வேண்டியது தானே? நான் ஒரு கோடி ரூபாய்க்கு திட்டமிட்டால் பத்து கோடிக்கு திட்டமிடலாமே என்றெல்லாம் கவர்ச்சி வசனங்களைப் பேசியிருக்கிறார்.
ஏதோ பார்வையற்றவர்கள் நலனில் இவர் ஒருவர்தான் அக்கறை கொண்டுள்ளவரைப் போலவும் மற்ற யாருக்கும் எந்த அமைப்புக்கும் எந்தவிதமான அனுதாபமும் இல்லாததைப் போலவும் பேசியிருக்கிறார். பார்வையற்றோர்கள் நலனிலும் உடல் ஊனமுற்றோர் நலனிலும் தனிப்பட்டவர்களும் சமூக அமைப்புகளும், அரசும் தேவையான அளவு அக்கறை எடுத்துக் கொண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்திட வேண்டும். அப்படிச் செய்யும் போது ஏதோ தான் ஒருவர் மட்டும்தான் அவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளதைப்போல பேசுவது உடல் ஊனமுற்றோரை இழிவுபடுத்துவதற்கு ஒப்பானதாகும். விஜயகாந்த் மட்டும் தான் தனது சொந்தப் பணத்திலிருந்து பலருக்கு உதவிகளைச் செய்து வருவதைப் போல அடிக்கடி பேசி வருகிறார்.
2005-ம் ஆண்டில் கலைஞர் 'மண்ணின் மைந்தன்' படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் கிடைத்த 11 லட்சம் ரூபாய் 'கண்ணம்மா' படத்தின் மூலம் கிடைத்த ஊதியம் 10 லட்சம் ரூபாய் ஆக 21 லட்சம் ரூபாயை சுனாமி நிவாரணத்திற்காக அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் மு.க.ஸ்டாலின் நேர் சென்று வழங்கும்படி செய்தவர் கலைஞர்.
இப்படி பல்வேறு திட்டங்களை வகுத்து எண்ணற்ற வகைகளில் ஊனமுற்றோர் மறுவாழ்வும் மறுமலர்ச்சியும் பெறுவதற்காக அயர்வின்றி கருணாநிதி அரசும் கருணாநிதியும் தொடர்ந்து பாடுபட்டு வருவதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். அத்துடன் பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும் ஊனமுற்றோர் நலம் பேண குறிப்பிடத்தக்கப் பணிகளை இந்த அரசின் ஆதரவுடன் ஆற்றி வருகின்றார்கள்.
எனவே விஜயகாந்த் சுயவிளம்பர நோக்கத்தோடு ஏதோ தான் ஒருவர் மட்டும்தான் ஊனமுற்றோருக்கு உழைத்திட அவதாரம் எடுத்துள்ளதைப் போலவும், தனது சொந்தப் பணத்தை மற்றவர்களுக்கு செலவு செய்ய முன்வந்திருப்பதைப் போலவும் பேசுவதும், செய்தி வெளியிடுவதும் ஊனமுற்றோருக்குச் செய்யும் உண்மையான சேவையாகாது'' என்று கீதாஜீவன் கூறியுள்ளார்.