அ.இ.அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி : திருநாவுக்கரசர்!
ஞாயிறு, 5 அக்டோபர் 2008 (12:43 IST)
தமிழகத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர அதிக வாய்ப்பு உள்ளது என்று அக்கட்சியின் தேசிய செயலர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தைப் பொறுத்த வரை வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் தவிர மற்ற கட்சிகளுடன் பாரதிய ஜனதா கூட்டணி அமைக்கும் என்று கூறினார்.
மேலும், சேது சமுத்திர திட்டம், அமர்நாத் கோயில் நில விவகாரம், விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு பிரச்சினைகளில் பா.ஜ.க. உடன் அ.இ.அ.தி.மு.க. ஒத்துப் போவதால் அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைய அதிக வாய்ப்பிருக்கிறது என்றும் அத்வானியை பிரதமராக ஏற்கும் எந்தவொரு கட்சிகளுடனும் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் பேசி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தீவிரவாதிகளை ஒடுக்க பொடா போன்ற கடுமையான சட்டங்களை கொண்டு வர காங்கிரஸ் அரசு முன்வரததற்கு கண்டனத்தை தெரிவித்த அவர் இதனால் பயங்கரவாத செயல்கள் நாட்டில் அதிகரித்து விட்டது என்றும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டம் கொண்டுவரப்படும் என்றும் திருநாவுக்கரசர் கூறினார்.