வருமான உச்சவரம்பை முற்றிலுமாக நீக்க வேண்டும்: தா.பாண்டியன் வ‌லியுறு‌த்த‌ல்!

ஞாயிறு, 5 அக்டோபர் 2008 (11:58 IST)
இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் முழுமையாஇதர பிற்படுத்தப்பட்டோருக்கே கிடைத்திட வருமான உச்சவரம்பை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலர் தா. பாண்டியன் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது குறித்து அவ‌ர் விடுத்துள்ள அறிக்கையில்‌, "இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் படிப்படியாக 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கிடும் வகையில் இவ்வாண்டு 9 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்பட்டன. வெறும் 9 விழுக்காடு இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையிலும்கூட நூற்றுக்கணக்கான இடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே இருந்தன. இவற்றை பொதுத் தொகுப்பிற்கு வழங்கிட கல்வி நிறுவனங்கள் முடிவு செய்தன.

உச்சநீதிமன்றமும் இதை ஆதரித்ததோடு, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான காலி இடங்களை அடுத்தடுத்த ஆண்டுகளில் நிரப்பக்கூடாது எனவும் கூறியுள்ளது. இது சமூக நீதிக்கு எதிரானதாகும்.

இதர பிற்படுத்தப்பட்டோரில் குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.2.5 லட்சத்திற்கு மேல் உள்ளவர்களை இடஒதுக்கீடு பெறும் உரிமையிலிருந்து நீக்கியதும், போட்டித் தேர்வான நுழைவுத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்ணை கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான தகுதியாக நிர்ணயித்ததுமே இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் போனதற்குக் காரணம்.

இந்த நிலையில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று வருமான உச்ச வரம்பை ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.4.5 லட்சமாக உயர்த்திட மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது.

இது ஓரளவிற்கு பயனளிக்கும் என்றாலும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் முழுமையாக இதர பிற்படுத்தப்பட்டோருக்கே கிடைத்திட வருமான உச்சவரம்பை முற்றிலுமாக நீக்க வேண்டும்.

போட்டித் தேர்வான நுழைவுத் தேர்வை தகுதிக்கான தேர்வாக மாற்றக்கூடாது. இடஒதுக்கீட்டு இடங்கள் முழுமையாக நிரம்பும் வகையில் கட்-ஆப் மதிப்பெண் படிப்படியாக குறைத்திட வேண்டும். இதற்கு எதிராக உள்ள உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை முறியடிக்கும் வகையில் உகந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி கேட்டுக்கொள்கிறது" எ‌ன்று தா.பாண்டியன் கூறியுள்ளார்.