கம்யூனிஸ்ட்கள் மோசம் என்று எப்போதும் கூறமாட்டேன் : கருணாநிதி!

சனி, 4 அக்டோபர் 2008 (13:57 IST)
''இன்றைய முதல்வர் சொல்வதற்கெல்லாம் நாங்கள் தலையாட்டினால் கம்யூனிஸ்டுகள் மிகவும் நல்லவர்கள் என்பார், இல்லையென்றால் மோசமானவர்கள் என்பார்'' என்று தா.பாண்டியன் கூ‌றியத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்து‌ள்ள முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, நான் சொல்வதெற்கெல்லாம் நீங்கள் தலையாட்டினாலும், இல்லையென்றாலும் உங்களையெல்லாம் நல்லவர்கள் என்றுதான் இப்போதும் கூறுகிறேன் எ‌ன்று‌ம் கம்யூனிஸ்ட்கள் மோசம் என்று எப்போதும் நான் கூறமாட்டேன் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌‌‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''நோபல் பரிசுக்கு இணையாக, ஸ்வீடன் நாடு வழங்கும் இந்த ஆண்டுக்கான "வாழ்வுரிமை விருது'' தமிழகத்தைச் சேர்ந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் வாழும் கிருஷ்ணம்மாள்-சங்கரலிங்கம் ஜெகந்நாதன் தம்பதியர் 1998ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தமிழகத்திலே நடைபெற்ற போது, டாக்டர் அம்பேத்கர் மக்கள் சங்கத்தின் சார்பாக ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த 550 நில மற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, நன்னிலம் ஆகிய வட்டங்களில் உள்ள 565 ஏக்கர் நிலங்களை, ஒரு குடும்பத்திற்கு ஒரு ஏக்கர் என்ற திட்டத்தின் கீழ் வழங்கி, அதற்கான கொடை ஆவணங்களை பதிவு செய்யும் போது முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணத்துக்கு விலக்கு அளிக்க வேண்டுமென்று ஒரு கோரிக்கையினை வைத்தனர்.

தி.மு.க ஆட்சியில் அந்தக் கோரிக்கை 29-4-1998 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலே வைக்கப்பட்டு, அமைச்சரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கான ஆணையும் அப்போதே பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் 12-3-2001இல் தி.மு.க ஆட்சி மாறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, டாக்டர் அம்பேத்கர் மக்கள் சங்கம் தனது முதல் கோரிக்கையைத் தொடர்ந்து மற்றொரு கோரிக்கையை அரசாங்கத்திற்கு அனுப்பியது. அதிலே, அந்த நிலங்களை ஆதி திராவிட மக்களுக்கு விற்பனை ஆவணங்கள் மூலமாக வழங்க உத்தேசித்துள்ளதாகவும், எனவே அரசின் ஆணையில் 'கொடை ஆவணம்' என்று இருப்பதற்குப் பதிலாக 'விற்பனை ஆவணம்' என்று சிறிய திருத்தம் செய்து புதிய அரசாணை வெளியிட்டு உதவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

இந்தக் கோரிக்கையை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி, அவரும் இதனை ஏற்றுக் கொள்ளலாம் என்று பரிந்துரை செய்து அரசாங்கத்திற்கு கோப்பினை அனுப்பினார். இதற்கிடையில் தமிழகத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்று, அம்மையார் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி அமைகிறது.

2001ஆம் ஆண்டு அம்பேத்கர் மக்கள் சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட அந்தத் திருத்த கோரிக்கை, அ.தி.மு.க. அரசின் சட்டத் துறையினால் பரிந்துரை செய்யப்பட்டு, அடுத்து வணிக வரித்துறையும் ஏற்றுக் கொண்டு, நிதித்துறையும் மறுப்பு எதுவும் சொல்லாமல் ஒப்புதல் தந்து, முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஒப்புதல் கையெழுத்துக்காக கோப்பு 18-6-2003 அன்று அவரது அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.

அம்மையாரின் செயலாளர் அந்தக் கோப்பு அமைச்சரவையிலே வைக்கப்படலாமா என்று அதிலே எழுதி, அதற்கான பதிலை மீண்டும் சுற்றுக்கு அனுப்புமாறு தெரிவித்து கோப்பினை துறைக்கே திருப்பி அனுப்பி வைக்கிறார். முதலமைச்சரே அந்தக் கோப்பிலே அமைச் சரவையிலே விவாதிக்கலாம் என்று எழுதி கோப்பினை அனுப்பியிருந்தால், அதற்கடுத்த அமைச்சரவையிலே அது விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டிருக்கும்.

ஆனால் துறைக்கே கோப்பு திரும்ப அனுப்பப்பட்டு விட்டதால், அமைச்சரவையிலே விவாதிக்கலாம் என்று துறை சார்பில் பதில் எழுதி, அந்தக் கோப்பு மீண்டும் ஊர்வலமாக அனுப்பப்பட்டு, அதன் பயணம் 25-6-2003 அன்று தொடங்கி, 16-11-2004 அன்றுதான் அதாவது அந்தக் கோப்பு மொத்தம் 17 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் முதலமைச்சர் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தது.

முதலமைச்சர் ஜெயலலிதா, தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனை ஆயிற்றே, பல மாதங்களாக அவர்கள் காத்திருக்கும் பிரச்சனை ஆயிற்றே என்று கவலைப்பட்டு உடனடியாக அந்தக் கோப்பிலே கையெழுத்து போட்டாரா? இல்லை. கோரிக்கை என்ன? அம்பேத்கர் மக்கள் சங்கத்தினர் 550 ஏழை தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு குடும்பத்திற்கு ஒரு ஏக்கர் வீதம் வழங்குவதை பதிவு செய்யும் போது 'கொடை ஆவணம்' என்பதை 'விற்பனை ஆவணம்' என்று அரசாணையில் சிறு திருத்தம் செய்து புதிதாக ஆணை பிறப்பிக்க வேண்டுமென்று வைத்த கோரிக்கை. அந்தக் கோப்பு முதலமைச்சர் அலுவலகத்திலே ஒரு மாதத்திற்குப் பிறகாவது கையெழுத்தாகியதா? இல்லை. இரண்டு மாதங்களுக்குப் பிறகாவது விடிவு பிறந்ததா? இல்லை, இல்லவே இல்லை.

முதலமைச்சர் அலுவலகத்திற்கு 2003 ஆண்டு சென்று, முதல்வரின் செயலாளரால் திரும்ப அனுப்பப்பட்டு, மீண்டும் 2004ஆம் ஆண்டு சென்ற அந்தக் கோப்பு 2006ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்று, அ.தி.மு.க. ஆட்சி வீட்டுக்குச் செல்கிற வரையில் முதலமைச்சர் அலுவலகத்திலே தூங்கிக் கொண்டிருந்ததே தவிர, முதல்வரின் கையெழுத்து கிடைக்கவில்லை. 2006ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு அந்தக் கோப்பு என்னிடம் வந்து நான் 11-9-2006 அன்று அந்தக்கோப்பிலே உள்ள கோரிக்கையினை ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டு அனுப்பி வைத்தேன்.

ஆனால் இன்றையதினம் நம்மைப் பார்த்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான பெரியவர் நல்லகண்ணு தி.மு.க அரசு இனியாவது தூங்காமல் பணியாற்ற வேண்டுமென்று அறிவுரை கூறுகிறார்; இடித்துரையாக! என்னை நன்றாக அறிந்த பெரியவர் நல்லகண்ணு போன்றவர்கள் அப்படிக் கூறிய போதிலும், ஸ்வீடன் நாட்டு வாழ்வுரிமை விருதைப் பெற்ற கிருஷ்ணம்மாள் இன்று காலையில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றினை நான் காண நேரிட்டது.

அந்தப் பேட்டியில் அவர் கூறியுள்ளார், "மதுரையில் இருந்து இங்கு வந்து வேலை செய்யணும்னு சொன்னா கலைஞர் போல ஒரு மாமனிதர் எங்களுக்கு உடனிருந்து ஒவ்வொரு நேரத்திலேயும் ஒவ்வொரு காரியத்திலேயும் ஈடு கொடுக்காட்டி போனா இந்த வேலையை இங்க செய்ய முடியாது. எங்களுக்கு இப்படிப்பட்ட பன்னாட்டு விருதும் கிடைக்காது. இதற்கு உறுதுணையாய் இருந்த கலைஞருக்கு நாங்க நன்றி சொல்ல மிக மிக கடமைப்பட்டிருக்கிறோம் நாங்கள் ரெண்டு பேரும்.''

இந்தப் பேட்டியைக் கேட்ட போது, இன்றைய 'ஜனசக்தி' நாளேட்டில் அந்தக் கட்சியின் தலைவர்கள் நம்மை ஏசிப் பேசி வெளிவந்துள்ள செய்திகளுக்கு பெரிதும் மாறுதலாகவும், ஆறுதலாகவும் இருந்தது.

அந்தக் கட்சியில் நான் பெரிதும் மதிக்கின்ற மற்றொரு தலைவர் ஏ.எம்.கோபு அவர் கூட கருணாநிதி ஆட்சியிலே சிறைக்குச் சென்றோம் என்று பேசியிருக்கிறார். அவரை சிறைக்கு அனுப்ப வேண்டுமென்று கனவிலே கூட நினைப்பவனல்ல நான். இன்னும் சொல்லபபோனால் பொது வாழ்வில் ஈடுபட்டவர்கள்; அவர்கள் வசிப்பதற்கு வீடு இல்லாமல் சிரமப்படுகிறார்கள் என்ற செய்தியை அறிந்ததும், 24 மணி நேரத்தில் அவர்களுக்கு அரசு சார்பில் ஒரு வீட்டினை ஒதுக்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்தவன் நான். எனது உணர்வுகளை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகச் சொல்கிறேன்.

அந்தக் கட்சியின் மற்றொரு தலைவரான தா.பாண்டியன் நேற்று பேசும் போது, "தேசப்பற்று மிக்க தலைவர்களை மதித்த அன்றைய முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் எங்கே? இப்போது உள்ள முதல்வர் எங்கே?'' என்று கேட்டிருக்கிறார். ஓமந்தூரார் அளவிற்கு அவரோடு என்னை ஒப்பிட்டுக் கொள்ள நான் தயாராக இல்லை. இருந்தாலும் அவருடைய பெயரையே சென்னையிலே உள்ள அரசினர் வளாகத்திற்கு பெயராகச் சூட்டி மகிழ்ந்தவன் நான் என்பதும், தேசப்பற்று மிக்க தலைவர்களை மதிக்க நான் என்றும் தயங்கியதில்லை என்றும், அதற்கான முழு பட்டியலையும் தா.பாண்டியனுக்கு தரவேண்டுமென்றால் அதற்கும் தயாராக இருக்கிறேன் என்பதையும், தியாகிகள் மணி மண்டபம் தொடங்கி, ப.ஜீவானந்தம், விஸ்வநாததாஸ், பாஷ்யம் என்ற ஆர்யா, செண்பகராமன், பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, பெரியவர் பக்தவத்சலம், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், பூலித்தேவன், தில்லையாடி வள்ளியம்மை என்று தேசப்பற்று மிக்க அத்தனை தலைவர்களையும் மதித்து அவர்களுக்கு உரிய இடத்தைத் தந்து பெருமையடைந்தவன் தான் இந்தக் கருணாநிதி என்பதையும் தா.பாண்டியன் அறியாவிட்டாலும், அந்தக் கட்சியிலே 'தொடர்ந்து' உள்ள மற்ற தலைவர்கள் நன்றாகவே அறிவார்கள்.

அவரே மேலும் 'இன்றைய முதல்வர் சொல்வதற்கெல்லாம் நாங்கள் தலையாட்டினால் கம்யூனிஸ்டுகள் மிகவும் நல்லவர்கள் என்பார். இல்லையென்றால் மோசமானவர்கள் என்பார்' என்றும் சொல்லியிருக்கிறார். தா.பாண்டியன் அவர்களே, நான் சொல்வதெற்கெல்லாம் நீங்கள் தலையாட்டினாலும், இல்லையென்றாலும் உங்களையெல்லாம் நல்லவர்கள் என்று தான் இப்போதும் கூறுகிறேன். கம்யூனிஸ்ட்கள் மோசம் என்று எப்போதும் நான் கூறமாட்டேன். கம்யூனிஸ்ட் தலைவர்கள் மாறலாம், கம்யூனிசம் மாறாது என்பதை நன்றாக அறிந்தவன் நான்.

வீட்டு மனை வழங்க அரசு மறுக்கின்றது என்றும் தா.பாண்டியன் சொல்லியிருக்கிறார், பல முறை அரசின் சார்பில் விளக்கம் அளித்த பிறகும். தி.மு.ஆட்சி 2006 மே திங்களில் பொறுப்பேற்ற பிறகு இந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 6 லட்சத்து 4 ஆயிரத்து 700 இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இலவச வீட்டு மனைப்பட்டா குறித்து தமிழகத்திலே இந்த அளவிற்குக் குரல் எழுப்புவோர், மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் எத்தனை இலட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்ற புள்ளி விவரத்தைத் தருவார்களேயானால், தமிழகத்திலும் அதனைப் பின்பற்றுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

பழைய உறவில் பாண்டியனுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு தரப்படுகின்ற பதில்கள் பத்திரிகைகளில் வருவதையாவது தயவுசெய்து படியுங்கள்'' எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.