ஈரோடு மாவட்டத்தில் டீ, சிகரெட் விற்பனை குறை‌ந்தது!

சனி, 4 அக்டோபர் 2008 (10:30 IST)
பொது இடங்களில் புகை பிடிக்க கூடாது என்ற சட்டம் அமுலுக்கு வந்த காரணத்தால் ஈரோடு மாவட்டத்தில் பெட்டி‌க்கடை மற்றும் டீ கடைகளில் சிகரெட், டீ விற்பனை பாதிக்கு மேல் குறைந்துவிட்டது.

பொதுவாக நகர்பகுதி மற்றும் கிராம பகுதிகளில் ஆங்காங்கே பெட்டி‌க்கடைகள், டீ கடைகள் அதிகம் காணமுடியும். கிராமம் என்றால் ஒரு கிராமத்தில் குறைந்தது இரண்டு மூன்று பெட்டி‌க்கடை, டீ கடை இருக்கும். ஆனால் நகர் பகுதியில் சில இடங்களில் ூறு அடிக்கு ஒரு பெட்டிக்கடை, டீ கடைகளை காணமுடியும்.

குறிப்பாக பொதுமக்கள் அதிகமாக கூடும் பத்திரபதிவு அலுவலகம், பேருந்து நிலையம், மின்சார அலுவலகம், வட்டாச்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் நாம் அதிகமாக இந்த கடைகளை காணமுடியும். கடைக்கு வரும் வாடிக்கையாளர் டீ அருந்திவிட்டு உடனே ஒரு சிகரெட் பத்தவைத்து புகைத்தால்தான் அவருக்கு திருப்தியாக இருக்கும்.

அதேபோல் பெட்டிக்கடைகளில் விற்பனையில் முதலிடம் பிடிப்பது சிகரெட், பீடி தான். தற்போது பொது இடங்களில் புகை பிடிக்க கூடாது என தடை சட்டம் போட்டதால் பெட்டிக்கடைகளின் விற்பனை வெகுவாக பாதித்துள்ளது. மேலும் டீ குடித்தால் உடனே சிகரெட் புகைக்க வேண்டும் ஆனால் வழியில்லை. ஆகவே டீ வேண்டாம் என்ற முடிவுக்கும் புகைப்பவர்கள் வந்துவிட்டனர்.

இதன் காரணமாக டீ விற்பனையும் மந்தமாகிவிட்டது. இந்த நிகழ்வுகள் வீட்டு பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிகரெட் புகைத்தால் உடல்நலனுக்கு தீங்கு என தன் கணவர்களுக்கு அறிவுரை வழங்கியும் கேட்காமல் தொடர்ந்து சிகரெட் பிடித்தவர்கள் கடந்த இரண்டு நாட்களாக வீட்டின் பின்னால் மறைந்தும், ஒளிந்தும் ஓரிரு சிகரெட் பிடித்து வருகின்றனர். இன்னும் சில நாட்களில் அவர்களாகவே சிகரெட் மறந்து விடுவார்கள் என்று சந்தோஷப்படுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்