‌கூட்டு நடவடிக்கையை இ‌ந்‌திய அரசு கை‌விடா‌வி‌ட்டா‌ல் நாடு தழு‌விய போரா‌ட்ட‌ம்: திருமாவளவன்!

சனி, 4 அக்டோபர் 2008 (10:04 IST)
''சி‌றில‌ங்க கட‌ற்படையுட‌ன் சே‌ர்‌ந்து கூட்டு நடவடிக்கையை இந்திய அரசு முன்னெடுக்குமேயானால், தமிழக மீனவர்களை ஒன்று திரட்டி நாடு தழுவிய அளவில் மாபெரும் போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் நடத்தும்'' எ‌ன்று அ‌க்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெ‌‌ரிவ‌ி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொடர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் தொடர்ந்து சுட்டுக் கொல்வது, அவர்களது வலைகளை அறுத்து சேதப்படுத்துவது, மீன்களை கொள்ளையடித்து செல்வது என்று தமிழக கடல் எல்லைக்குள்ளேயே புகுந்து அட்டூழியம் செய்து வருவதை இந்திய கடற்படை இத்தனை காலமும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

இந்திய அரசும் சிங்கள கடற்படையின் எல்லைத் தாண்டிய அத்துமீறலை இதுவரை கண்டித்தது இல்லை. ஆனால், சிங்கள் அயலுறவு அமைச்சர் ரோகித் பொகல்லகாம, இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்த பிறகு, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க, இந்திய-‌இலங்கை கடற்படையின் கூட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளனர்.

குற்றம் இழைத்தவனை தண்டிக்க வேண்டிய இந்திய அரசு, தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் சிங்கள கடற்படையை எதிர்த்து கடும் ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டிய இந்திய கடற்படை, சிங்கள கடற்படையுடன் கைகோர்த்து பணியாற்றுவோம் என்று அறிவித்திருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளையும் கொச்சைப்படுத்தும் செயலாகும்.

தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் சிங்கள கடற்படையின் தாக்குதல்களில் இருந்து தமிழ் மீனவர்களை காப்பாற்ற வேண்டிய இந்திய அரசும், உலகின் 3-வது பெரிய ராணுவம் என்று மார்தட்டிக் கொள்ளும் இந்திய ராணுவமும் சிங்கள கடற்படையை அடக்கி வைக்க திராணியற்று, இந்த கூட்டு நடவடிக்கைக்கான அறிவிப்பை செய்திருப்பது இந்திய இறையாண்மைக்கு மிகப்பெரிய தலைகுனிவு.

தமிழ் மீனவர்களை சுட்டுக் கொல்வது சிங்கள கடற்படைதான் என்பது உலகம் அறிந்த ஒன்று. இந்த நிலையில் இந்த கூட்டு நடவடிக்கை ஈழத் தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் அழித்தொழிப்பதற்கே பயன்படுமேயல்லாமல், பாதுகாப்பாக அமையாது. உடனடியாக, இந்திய அரசு இந்த கூட்டு நடவடிக்கை அறிவிப்பை கைவிடுவதாக அறிவிக்க வேண்டும்.

மாறாக கூட்டு நடவடிக்கையை இந்திய அரசு முன்னெடுக்குமேயானால், தமிழ்நாட்டு மீனவர்களை ஒன்று திரட்டி நாடு தழுவிய அளவில் மாபெரும் போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் நடத்தும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்'' எ‌ன்று ‌திருமாவளவ‌‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.