4 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் விருது : கருணாநிதி ஆணை!
வெள்ளி, 3 அக்டோபர் 2008 (18:28 IST)
கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக, 4 காவல்துறை அதிகாரிகளுக்கு 2008ஆம் ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் விருது வழங்க முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடலூர் மாவட்டம், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் செ.பெ.முருகேசன், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு உட்கோட்டம், துணைக் காவல் கண்காணிப்பாளர் தே.மகேந்திரவர்மன், விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகர உதவி காவல் ஆய்வாளர் பா.குமார் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் உதவி காவல் ஆய்வாளர் இரா.ரவி ஆகியோருக்கு கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் பாராட்டத்தக்க பணியாற்றியமைக்காக, 2008ஆம் ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் விருது வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
இந்த விருதை முதலமைச்சர் கருணாநிதி 2009ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்குவார். இவ்விருதுடன் பரிசுதொகையாக தலா ரூ.20,000 மும் வழங்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.