இலங்கைத் தமிழர்களுக்காக அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்றும் இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம் என்றும் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு கூறினார்.
webdunia photo
FILE
சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. ஈழத் தமிழர்கள் அனைத்து சமூக, பொருளாதார, அரசியல் ரீதியான உரிமைகளை பெறுவதற்கு, அவர்களின் பாதுகாப்பிற்கு பெருமுயற்சிகளை எடுத்துள்ளோம். தற்போது மத்திய அரசு வேறு எந்த அரசியல் கட்சிகளும் எடுக்க முடியாத அளவுக்கு ஈழத் தமிழர் பிரச்சினையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இலங்கைத் தமிழர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பதில் எந்த குறையும் நாங்கள் வைக்கவில்லை. இந்த பிரச்சினையில் தமிழக முதலமைச்சர் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். இலங்கைத் தமிழர் நிலையை காக்க எப்போதும் காங்கிரஸ் கட்சி முன் நிற்கும். எங்கள் தலைமையின் உயிரையே கொடுத்திருக்கிறோம். இதற்கும் மேல் என்ன செய்ய வேண்டும்.
மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக இல்லை என்று சில கட்சிகள் குரல் எழுப்புகிறார்கள். மத்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இல்லை என்று பிம்பம் ஏற்படுத்த முயற்சிப்பது தவறு.
தமிழக மீனவர் பிரச்சினை என்றாலும், இலங்கைத் தமிழர் பிரச்சினை என்றாலும் தமிழக காங்கிரஸ் சார்பில் பிரதமரை சந்தித்து பேசியிருக்கிறோம். இந்திய மீனவர்கள் இந்திய எல்லையில் மட்டுமல்ல இலங்கை எல்லையிலும் மீன்பிடிக்கலாம் என்ற உரிமையையும் பிரதமர் வாங்கியிருக்கிறார்.
காங்கிரசும், மத்திய அரசும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியை அனுமதிக்க முடியாது. அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு இலங்கைத் தமிழர்களுக்காக போராட வேண்டும். அனைத்து கட்சிகளும் சேர்ந்து சென்று பிரதமரை சந்தித்திருக்கலாம். அப்படி அனைத்து கட்சிகளும் வந்தால் நாங்களும் சேர்ந்து சென்று பிரதமரை சந்தித்து இந்த பிரச்சினையில் வலியுறுத்துவோம். இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம் என்று தங்கபாலு கூறினார்.