ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

புதன், 1 அக்டோபர் 2008 (11:41 IST)
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தை திடீரென பெண்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு அருகே சென்னிமலையி‌ல் உள்ளது 1010 நெசவாளர் நகர். இங்குள்ள மக்களுக்கு போதிய குடிநீர் வசதி இல்லை. இந்த பகுதியில் ஐந்தாயிரம் நெசவாளர்கள் குடியிருந்து வருகின்றனர்.

இப்பகுதி பெண்கள் திடீரென ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக்தை காலிகுடங்களுடன் முற்றுகையிட்டனர்.

இது குறித்து அப்பகுதி பெண்களிடம் கேட்டபோது அவர்கள் கூறுகை‌யி‌ல், 1010 நெசவாளர் நகருக்கு ஆழ்குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதில் கடந்த ஓராண்டாக குடிநீரில் உப்புதன்மை அதிகரித்துள்ளது. இதனால் இந்த தண்ணீரை பயன்படுத்துவதால் சளி, காய்ச்சல், வயிற்றுபோக்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகிறது.

இந்த தண்ணீரில் சமையல் செய்தால் சாதம் மஞ்சள் நிறத்தில் உள்ளது. ஆகவே எங்களுக்கு காவிரி தண்ணீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் எங்கள் பகுதிக்கு நூலகம், தார்சாலை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவையும் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

திடீரென பெ‌ண்க‌ள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் ஆட்சியர் அலுவலகம் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. பின் ஆட்சியர் பொறுப்பு மனோகரனிடம் இப்பகுதி பெண்கள் மனு கொடுத்தனர். கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன் பேரில் பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் சில மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்