பொது இடங்களில் புகைபிடிக்க தடை சட்டத்தை செயல்படுத்த பறக்கும் படை: அரசு அறிவிப்பு!
புதன், 1 அக்டோபர் 2008 (10:58 IST)
பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதிக்கும் சட்டத்தை செயல்படுத்த மாநில, மாவட்ட, வட்ட மற்றும் கிராம அளவில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "உலகில் 55,00,000 மக்கள் புகையிலை பழக்கத்தால் ஆண்டுதோறும் உயிர் இழக்கிறார்கள். குழந்தைகளில் பாதிக்குமேல் புகை பிடிப்பவர்கள் விடும் புகையை சுவாசிப்பதால் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆண்களில் 57 விழுக்காட்டினரும், பெண்களில் 10.8 விழுக்காட்டினரும் புகையிலையை பயன்படுத்துகிறார்கள். தினமும் 2,500 பேர் வீதம் ஆண்டுதோறும் சுமார் 9,00,000 மக்கள் புகையிலை பழக்கத்தினால் இறக்கின்றனர்.
தமிழ்நாட்டில் 13 வயது முதல் 15 வயது வரையுள்ள பள்ளி செல்லும் குழந்தைகளில் 7 விழுக்காட்டிற்கு மேல் புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். தினமும் 5,500 இளைஞர்கள் புதிதாக புகையிலை பொருட்களை பயன்படுத்த தொடங்குகிறார்கள்.
புகையிலையை பயன்படுத்துவதாலும், புகைபிடிப்பவர்களால் விடப்படும் புகையை சுவாசிக்க நேருவதாலும் அவர்களுக்கு அருகில் உள்ளவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா, பக்கவாதம் மற்றும் இருதய நோய்கள் ஏற்படுகின்றன. புகையிலை மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுப்பதன் மூலமே இந்த நோய்களையும், இறப்புகளையும் தடுத்திட முடியும்.
எனவே, மத்திய அரசு, பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கும் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் இந்தியா முழுவதும் நாளைமுதல் (அக்டோபர் 2) அமலாக்கப்படுகிறது. இதன் மூலம் பொது இடங்களில் புகை பிடிப்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
பொது இடங்கள் என்பது பொது மக்கள் கூடுகின்ற இடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ள அரங்கங்கள், திறந்தவெளி அரங்கங்கள், மருத்துவமனைகள், ரயில் நிலையம், வணிக வளாகங்கள், அலுவலக வளாகங்கள், திரைஅரங்குகள், நீதிமன்ற கட்டிடங்கள், பொதுமக்கள் புழங்கும் பகுதிகளான உணவு விடுதிகள், தங்குமிடங்கள், சிற்றுண்டி விடுதிகள், பேருந்து நிலையங்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவை அடங்கும்.
தமிழ்நாட்டில் இந்த சட்டத்தை அமலாக்கும் அதிகாரிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காவல் துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் ஆகியோர் இந்த சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகள் ஆவார்கள்.
மேலும் கீழே குறிப்பிட்டுள்ள அதிகாரிகளும் இந்த சட்டத்தை அவரவர் நிர்வாக வரம்பிற்குள் செயல்படுத்தும் அதிகாரிகள் ஆவார்கள்.
மத்திய கலால் ஆய்வாளர், வருமான வரித்துறை ஆய்வாளர்கள், விற்பனை வரி ஆய்வாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், போக்குவரத்து ஆய்வாளர்கள், ரயில் நிலைய அதிகாரிகள், ரயில் நிலையத்தின் துணை நிலைய அதிகாரிகள், தலைமை நிலைய அதிகாரிகள், நிலைய பொறுப்பாளர்கள், அனைத்து அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள், அதற்கு இணையான அதிகாரிகள் ஆகியோர் அவரவர் எல்லைக்குட்ட பகுதிகளில் புகைபிடிப்பதை கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள்.
அதுபோல அரசு மற்றும் தனியார் மருத்துவமனை இயக்குனர், மருத்துவ கண்காணிப்பாளர், மருத்துவமனை நிர்வாகி, தபால் நிலைய அதிகாரி, தனியார் அலுவலகத்தின் தலைமை நிலைய அதிகாரி, மனிதவள மேம்பாட்டு மேலாளர், தலைமை நிர்வாகி, கல்லூரி, பள்ளி, தலைமை ஆசிரியர், முதல்வர், நூலகர், துணை நூலகர், நூலக பொறுப்பாளர் மற்றும் மற்ற நூலக அலுவலர், விமான நிலையங்களின் நிலைய மேலாளர், விமான நிலைய அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள், அனைத்து பொது இடங்களின் இயக்குநர், சுகாதாரப்பணிகள் இயக்குனர் ஆகியோர் புகைபிடிக்க தடைவிதிக்கும் சட்டத்தை அமல்படுத்துவார்கள்.
அனைத்து பொது இடங்களின் மத்திய மற்றும் மாநில பொறுப்பு அதிகாரிகள், புகையிலை கட்டுப்பாடு மாநில மற்றும் மாவட்ட நிலைய ஒருங்கிணைப்பு அதிகாரி ஆகியோர் பொது இடங்களில் புகைபிடிப்பவரை கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். இந்த சட்டத்தை செயல்படுத்த மாநில, மாவட்ட, வட்ட மற்றும் கிராம அளவில் பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.