சென்னையில் மீண்டும் மின்வெட்டு!
புதன், 1 அக்டோபர் 2008 (10:15 IST)
காற்றாலை மின் உற்பத்தி 500 மெகாவாட்டுக்கும் குறைவாக இருந்ததால் நேற்று முதல் சென்னை நகரிலும் மின்வெட்டு மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் பருவமழை பொய்த்து மின் உற்பத்தி குறைந்ததாலும், மின்சாரத்தின் தேவை அதிகரித்ததாலும் தமிழகம் முழுவதும் மின்வெட்டு சில வாரங்களுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டது.
சென்னையில் ஒன்றரை மணி நேரமும், புறநகரில் 3 மணி நேரமும், கிராமப்புறங்களில் 5 மணி நேரமும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் இடையில் பருவமழை பெய்ததாலும், காற்றும் நன்றாக வீசியதாலும் காற்றாலை மின் உற்பத்தி அதிகமானது. இதனால் சில வாரங்கள் தமிழகம் முழுவதும் மின்வெட்டு தற்காலிகமாக தளர்த்தப்பட்டது.
பின்னர் காற்றாலை மின் உற்பத்தி படிப்படியாக குறையத் தொடங்கியது. இதனால் மீண்டும் கிராமப்புறங்களிலும், புறநகர் பகுதியிலும் படிப்படியாக மின்வெட்டு மீண்டும் நடைமுறைக்கு வந்தது.
சென்னையில் மட்டும் மின்வெட்டு இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று காற்றாலை மின் உற்பத்தி 500 மெகாவாட்டுக்கும் குறைவாக இருந்ததால் நேற்று முதல் சென்னை நகரிலும் மின்வெட்டு மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நேரத்திலேயே இந்த மின்தடை செய்யப்படுகிறது.