இந்திய கம்யூனிஸ்டு உண்ணாவிரதத்திற்கு விஜயகாந்த் ஆதரவு!
செவ்வாய், 30 செப்டம்பர் 2008 (10:19 IST)
சிறிலங்க அரசை கண்டித்து அக்டோபர் 2ஆம் தேதி சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நடத்தும் உண்ணாவிரத போராட்டத்திற்கு, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார்.
webdunia photo
FILE
இது குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாடு மாநில செயலர் தா.பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில், தமிழர்கள் மீதான ராணுவ தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். சிறிலங்க ராணுவத்திற்கு, இந்தியா ராணுவ உதவி உள்ளிட்ட உதவிகளை வழங்க கூடாது. இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதி வழியில் அரசியல் தீர்வுகாண வேண்டும்.
இதற்கு இந்திய அரசு, சிறிலங்கா அரசை வலியுறுத்த வேண்டுமென வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காந்தி பிறந்த அக்டோபர் 2ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
சென்னையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் தே.மு.தி.க. சார்பில் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குவார் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். தங்களது போராட்டம் வெற்றிபெற எங்களது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.