‌விஜயகா‌ந்‌தை ச‌ந்‌தி‌ப்பே‌ன் : தா.பாண்டியன்!

திங்கள், 29 செப்டம்பர் 2008 (11:20 IST)
விஜயகா‌ந்துட‌ன் பே‌சிய ‌பி‌ன்ன‌ர் தே.மு.தி.க.வுடன் தேர்தல் கூட்டணி வை‌ப்பது பற்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

webdunia photoFILE
த‌ஞ்சாவூ‌ரி‌ல் செ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், அ‌க்டோப‌ர் 2ஆ‌ம் தேதி சென்னையிலும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ‌சி‌றில‌ங்க தமிழரின் உயிர் பாதுகாப்பு, உரிமைப்பாதுகாப்பு கோரி கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உண்ணாவிரதம் நடத்த உள்ளோம். இதர கட்சிகள், பல்வேறு அமைப்புகள் வாழ்த்து வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

சி‌றில‌ங்க அரசு, பயங்கரவாதத்தில் ஈடுபட்டு தமிழ் இன மக்களை கொன்று தீர்க்க முயல்கிறது. ஓர் இனத்தையே அழிக்கும் செயலில் இறங்கி உள்ளது. எனவே, உடனே போரை நிறுத்தி, அரசியல் தீர்வு காண ‌சி‌றில‌ங்க அரசு முயல வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

சி‌றில‌ங்க அரசுக்கு எந்த ராணுவ உதவியும், பொருளுதவியும் செய்யக்கூடாது. இந்த நேரத்தில் கடன் அளிப்பது கூட மக்களை கொலை செய்வதற்கு உதவுவதாக அமையும். அந்த நாட்டில் அகதிகளாக ஆக்கப்பட்ட 3 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களுக்கு இந்திய அரசு நேரடியாகவோ, செ‌‌ஞ்‌சிலுவை மூலமாகவோ உணவு, உடை, மருந்து ஆகியவற்றை விரைந்து அனுப்ப வேண்டும் எ‌ன்றா‌ர்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து கூ‌ட்ட‌ணி ப‌ற்‌றி பேசுவீர்களா? எ‌ன்ற கே‌ள்‌வி‌க்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த தா.பா‌ண்டிய‌ன், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள், ‌விஜயகா‌ந்‌த்தை ச‌ந்‌தி‌த்து பேசிவிட்டு வந்துள்ள விவரத்தை தெரிவித்துள்ளனர். நாங்களும் ‌விஜயகா‌‌ந்துட‌ன் பே‌சிய ‌‌பி‌ன்ன‌ர், இறுதி முடிவை இரு கட்சிகளு‌ம் இணைந்து எடுப்போம் எ‌ன்றா‌ர்.

மீனவர்கள் தொடர்ந்து ‌சி‌றில‌ங்க கட‌ற்படை‌யினரா‌ல் சுடப்படுகின்றனரே? எ‌ன்ற ம‌ற்றொரு கே‌ள்‌வி‌க்கு, மீனவர்களை சுடுவதை நிறுத்துவோம் என ‌சி‌றில‌ங்க அரசு உறுதி தெரிவிக்கவில்லை. இந்திய அரசும் அந்த உறுதியைப் பெறவில்லை. எனவே, மீனவர்கள் பாதுகாப்பை மாற்று அணி முக்கிய கோரிக்கையாக தங்களது திட்டத்தில் அறிவிக்க வேண்டும் எ‌ன்று தா.பா‌ண்டிய‌ன் கூ‌றினா‌ர்.