சிறிலங்க கடற்படை துப்பாக்கிச் சூடு : தமிழக மீனவர் பலி!

ஞாயிறு, 28 செப்டம்பர் 2008 (13:33 IST)
இ‌ந்‌திய கட‌ல் எ‌ல்லை‌க்கு‌ட்ப‌ட்ட கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது, சிறிலங்க கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்!

ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், நேற்று இரவு கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த சிறிலங்க கடற்படையினர், மீனவர்களை அங்கிருந்து செல்லுமாறு மிரட்டியுள்ளனர். அதன்பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதில் முருகன் என்ற மீனவர் உடம்பில் குண்டு பாய்ந்ததில் அவர் அந்த இடத்தில்லேயே பலியாகியுள்ளார். இவர் மதுரை தத்தனேரி பாக்கியநாதபுரத்தைச் சேர்ந்தவர்.

இவருடன் படகில் இருந்த ராஜேந்திரன், துரைசாமி, லிங்கம் ஆகியோர் உயிர் தப்பியுள்ளனர்.

சிறிலங்க கடற்படையினர் துப்பாக்கிச் சூட்டில் பலியான முருகன் உடல் இன்று காலை ராமேஸ்வரம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து ராமேஸ்வரம் பகுதியில் பதற்றமான நிலை உருவாகியுள்ளது.

தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் இனிமேல் துப்பாக்கிச் சூடு நடத்தமாட்டார்கள் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதியிடம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் உறுதியளித்துவிட்டு சென்ற பிறகு நடத்தப்பட்டுள்ள இரண்டாவது துப்பாக்கிச் சூடு இது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்