கடலோர நிர்வாக அறிவிக்கை: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

சனி, 27 செப்டம்பர் 2008 (17:54 IST)
மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அச்சம் ஏற்பட்டிருப்பதால், வரைவு கடலோர நிர்வாக மண்டல அறிவிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிட வேண்டும் என்று பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கை முதல் அமைச்சர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் அந்த வரைவு அறிவிக்கை முழுமையாக ஏற்கப்படும் வரை அதனை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதைத் தள்ளி வைக்குமாறும் அவர் பிரதமருக்கு இன்று எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, முதலமைச்சர் கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வரைவு கடலோர நிர்வாக மண்டல அறிவிக்கை-2008, தங்களின் வாழ்வாதாரத்தை பாதித்து, பல இன்னல்களை ஏற்படுத்தும் என்று மீனவர்கள் கடும் அச்சம் அடைந்துள்ளதால், அந்த சமுதாயத்தினர் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக கடலோர நிர்வாக மண்டல அறிவிக்கையின் அனைத்து பிரிவுகளையும் தமிழில் மொழிபெயர்த்து அளிக்க வேண்டும்.

தமிழில் வெளியிடுவதன் மூலம் மீனவர்கள் அதுகுறித்த தங்களது கருத்துகளையும், அச்சத்தையும் தெரிவிக்க ஏதுவாகும்.

கடலோர சமுதாயத்தினரால் குறிப்பாக மீனவர்களால் வரைவு அறிக்கை முழுமையாக ஏற்கப்படும் வரை அதனை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதை பிரதமர் ஒத்தி வைக்குமாறு தாம் கேட்டுக்கொள்வதாகவும் முதலமைச்சர் அந்தக் கடிதத்தில் கோரியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்