நடிகர், தயாரிப்பாளர் பிரகாஷ் ராஜ் தயாரித்துள்ள `அபியும் நானும்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் கருணாநிதி, பிரகாஷ் ராஜ் ஒரு சிரஞ்சீவிக் கலைஞர் என்று பாராட்டு தெரிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இதற்கான விழாவில், இப்படத்தின் ஆடியோ சி.டி.க்களை கருணாநிதி வெளியிட, அவரது மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பெற்றுக் கொண்டார்.
விழாவில் பேசிய முதலமைச்சர், எந்தவொரு திரைப்படம் வெளியாவதையும் தாம் தடை செய்ய மாட்டேன் என்று கூறினார்.
ஏற்கனவே கடந்த முறை தாம் முதல் அமைச்சராக இருந்த போது திரைப்பட விருது வழங்கும் விழாவில்தான் முதன்முறையாக நடிகர் பிரகாஷ்ராஜை சந்தித்ததாகவும், அப்போது `இருவர்' படம் வெளிவந்திருந்தது. அந்த படத்தில் அவர் தன்னைப் போன்ற வேடத்தில் நடித்திருந்தார் என்றும் கருணாநிதி கூறினார்.
அப்போது அந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று ஒரு சிலர் கூறியதாகவும், ஆனால் ஜனநாயக நாட்டில் அவரவர் கருத்துக்களை சட்டத்துக்கு உட்பட்டு முறையாக வெளிப்படுத்த உரிமை உண்டு என்பதால் அதனை தாம் தடை செய்யவோ, நிறுத்தவோ மாட்டேன் என்று தெரிவித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
படமும் வெளிவந்து ஓரளவுக்கு வெற்றிகரமாக ஓடியது. பிரகாஷ்ராஜ் ஒரு சிறந்த கலைஞர். அவர் எழுதிய ஒரு புத்தகத்தை படித்தேன். அது சுவையாகவும், தத்துவ ரீதியாகவும் எழுதப்பட்டுள்ளதாகக் கூறிய முதலமைச்சர், பிரகாஷ் ராஜ் சாதாரண கலைஞர் அல்ல; அவர் ஒரு சிரஞ்சீவி கலைஞர். அவரது ஆற்றலும் சிந்தனையும் மக்களுக்கு பயன்பட வேண்டும் என்றார்.
தந்தைக்கும், மகளுக்கும் இடையே உள்ள பாச உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த இந்தப் படத்தின் விழாவை தந்தையையும், மகளையும் அழைத்து நடத்திய பாங்கு பாராட்டுக்குரியது என்றும், இதனால் தாம் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என்றும் கருணாநிதி குறிப்பிட்டார்.
முன்னதாக் வரவேற்புரையாற்றிய பிரகாஷ்ராஜ், தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பை இந்த படம் சொல்வதால் முதல்வரையும், அவரது மகள் கனிமொழியையும் விழாவுக்கு அழைத்ததாகக்குறிப்பிட்டார்.