காந்தி ஜெயந்தியில் அமல்: பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை

சனி, 27 செப்டம்பர் 2008 (17:31 IST)
மகாத்மா காந்தி பிறந்த நாளான வரும் அக்டோபர் 2ஆம் தேதி முதல பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை விதிக்கும் சட்டம் அமலுக்கு வரவிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டன் அன்புமணி கூறியிருக்கிறார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொது இடங்களில் புகைபிடிப்பதற்கு தடை விதிக்கும் சட்டத்தை கடுமையாக செயல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

பொதுமக்கள் இந்த சட்டத்தை பின்பற்றி நடக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், பொது இடங்களில் புகைப்பிடித்து முதல் தடவை பிடிபட்டால் 200 ரூபாய் அபராதம் விதிக்க அந்த சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது என்றார்.

மாநில அரசுகள் இதற்கு பூரண ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அன்புமணி கூறினார்.

குஜராத், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் பூரண மதுவிலக்கு அமலில் இருப்பதுபோல, தமிழகத்திலும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு அன்பான வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்