மின்னணு மாவட்டத் திட்டத்தின் கீழ் (e-district project) பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட பொது சேவை மையங்கள் தொடங்கப்படும் என்று மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
பெரம்பலூரில் நேற்று இந்த திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசிய ஸ்டாலின், இந்த மையங்கள் மூலம் பொதுமக்கள் பல்வேறு துறைகளின் விண்ணப்பப் படிவங்கள் உள்ளிட்ட படிவங்களைப் பெற முடியும் என்றார்.
சாலைப் போக்குவரத்து, பதிவுத்துறை, நுகர்பொருள் வழங்கல் துறை உள்ளிட்ட துறைகளின் படிவங்களும் இதில் அடங்கும் என்று அமைச்சர் கூறினார்.
இந்த மையங்கள் மூலமாக மக்கள் தங்கள் `சிட்டா அடங்கலை' அறிந்து கொள்வதுடன், ரயில் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளவும் முடியும் என்றார் அவர்.
அரியலூரைச் சேர்ந்த 2 கிராம மக்களுடன் இந்த மையங்களில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் ஸ்டாலின் உரையாடினார்.
அரசுக்கும், குடிமக்களுக்கும் இடையேயான தொடர்பை ஏற்படுத்தவும், வர்த்தகம் - குடிமக்கள் சேவைக்கும் இந்த மையங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் 20 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கிவைத்த அமைச்சர், 15 ஆயிரத்து 195 பயனாளிகளுக்கு 7 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்புடைய உதவிகளையும் வழங்கினார்.
நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசிய அமைச்சர், இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் அனைவருக்கும் வழங்கப்படும் என்றும், 4வது கட்டமாக சுமார் 40 லட்சம் தொலைக்காட்சிகள் வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு அடுத்ததாக ஒரு கட்டம் தேவைப்பட்டாலும் போதிய அளவு நிதி உள்ளதாகவும் ஸ்டாலின் கூறினார்.