சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள 'காதலில் விழுந்தேன்' திரைப்படம் வெளியிடக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக வெளியான தகவல்களை, தமிழக அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'மத்திய தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் பெற்ற எந்தவொரு படத்தையும், எந்தவொரு திரையரங்கமும், வினியோகஸ்தர்களும் திரையிடலாம். இதற்கு அரசு எவ்விதமான கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை' எனத் தெரிவித்துள்ளது.
கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், 'சிலர் தங்களின் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக அரசு மீது குற்றம் சாட்டுவதாக', அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் கருணாநிதியின் பேரனும், சன் தொலைக்காட்சி குழுமங்களின் தலைவருமான கலாநிதி மாறன் 'சன் பிக்சர்ஸ்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் அண்மையில் தொடங்கினார்.
இந்நிறுவனம் 'காதலில் விழுந்தேன்' என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது. இத்திரைப்படம் மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வெளியிட அனுமதிக்கப்படவில்லை என்று, அந்நிறுவனம் குற்றம்சாட்டியிருந்தது. இதுதொடர்பாக சன் பிக்சர்ஸ் சார்பில் தமிழக அரசின் உள்துறைச் செயலருக்கு புகாரும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தமிழக அரசின் மறுப்பு அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.