ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி வேங்கடசாமி மாரடைப்பால் சென்னையில் காலமானார் அவருக்கு வயது 75.
சென்னை அடையாறு இந்திரா நகரில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.வேங்கடசாமி வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த அவர், சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று மாலை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. நீதிபதி வேங்கடசாமியின் உடல் இன்று மாலை 5 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் வீரார்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த நீதிபதி வேங்கடசாமி,1983 ஆம் ஆண்டு முதல் 8 வருடங்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி உள்ளார்.
இதன் பிறகு உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 ஆண்டுகள் பணிபுரிந்து, அவர் ஓய்வு பெற்றார். தெகல்கா நீதி விசாரணைக்குழுத் தலைவர், மத்திய ரயில்வே தீர்ப்பாணையத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புக்களில் அவர் இருந்துள்ளார்.