காந்தி ஜெயந்தி: பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் புத்தகக் கண்காட்சி!
வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (16:58 IST)
காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி சென்னை, பெசன்ட் நகர் ராஜாஜி பவன் வளாகத்தில் செப்டம்பர் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
இக்கண்காட்சியில் கலை, கலாசாரம், வரலாறு, சுயசரிதை, தலைவர்களின் சொற்பொழிவுகள், மேற்கோள் புத்தகங்கள், காந்தி இலக்கியம் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் ஆகியன வைக்கப்பட்டுள்ளன. புத்தக விற்பனையும் உண்டு.
தேசிய புத்தக கழகம், சங்கீத நாடக அகாடமி, இந்திய வேளாண் ஆய்வு மையம், மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆய்வு மையம் ஆகிய நிறுவனங்களின் பதிப்புகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்தியா-2008, இந்திய ரயில்வேயின் பெருமைமிகு 150 ஆண்டுகள், மாவட்ட நிர்வாக கோட்பாடு மற்றும் நடைமுறை, இந்திய பொருளாதார வரலாறு 1& 2, தொலைத் தொடர்புகள் ஒரு வரலாறு, இனிய வரலாற்று கதைகள் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களும் இந்த கண்காட்சியில் கிடைக்கும்.
ராஜகோபாலாச்சாரி, லால்பகதூர் சாஸ்திரி, சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்களின் சிந்தனைகள் பற்றிய புத்தகங்களும் இந்திய பறவைகள், பூக்கள், இந்திய சினிமா துறையின் ஜாம்பவான்கள், 1857 எழுச்சி, புரட்சியாளர் பகத்சிங், 5,000 ஆண்டு இந்திய கட்டிடக் கலை பற்றிய அரிய புத்தகங்களும் இக்கண்காட்சியில் கிடைக்கும்.
இதுதவிர சாஞ்சி ஸ்தூபி, இந்திய வண்ணப்படங்கள், தஞ்சாவூர் பிரகதீசுவரர் ஆலயம், கோவா, டெல்லியில் உள்ள குதுப்மினார் உள்ளிட்ட பல வரலாற்றுச் சிறப்புமிக்க தலங்கள் குறுந்தகடுகளாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.
யோஜனா, குருஷேத்ரா, திட்டம் (தமிழ்), பாலபாரதி (இந்தி), ஆஜ்கல் (இந்தி) ஆகிய பதிப்புகளுக்கான சந்தாவும் கண்காட்சியில் ஏற்றுக் கொள்ளப்படும்.
இந்த புத்தக கண்காட்சியை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் புத்தக வெளியீட்டுப் பிரிவு ஏற்பாடு செய்துள்ளது.
விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விற்பனை உண்டு என்றும் புத்தகங்களுக்கு 10 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரை சிறப்புத் தள்ளுபடி உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.